Sunday, October 28, 2018

மிக சுவாரசியமான வீடியோக்கள் - 3


மிக சுவாரசியமான வீடியோக்கள் - 2


மிக சுவாரசியமான வீடியோக்கள் - 1


மிக சுவாரசியமான கணக்கு-4


ஒருவரிடம் 10 பைகள் உள்ளன. முதல் பையில் 100 கிராம் எடையுள்ள ஒரே ஒரு கோலி குண்டு உள்ளது. இரண்டாவது பையில் 100 கிராம் எடையுள்ள இரண்டு கோலி குண்டுகள் உள்ளன.இப்படியே 10வது பையில் 100 எடை கொண்ட 10 கோலிக்ள் உள்ளன.
கணக்கு என்னவென்றால் ஏதோ ஒரு பையில் உள்ள கோலி குண்டுகள் எல்லாம் 100 கிராமிற்கு பதில் 90 கிராம் கொண்டவைகளாக உள்ளன.
இதை ஒரே நிலுவையில்..நன்றாக கவனிக்கவும் …ஒரு தரம் தான் …ஒரே நிலுவையில் எந்த பையில் உள்ள கோலிகள் கனம் குறைந்தவை என்று கண்டுபிடிக்கவேண்டும்.
இதற்கு ஒரு க்ளூ என்னவென்றால் கீழ்கண்ட சூத்திரத்தை உபயோகித்துக்கொண்டு கண்டறியவேண்டும் :
n (n+1)
   2

மிக சுவாரசியமான கணக்கு - 3

மேசையின் உயரம் என்ன?

மேலே உள்ள கணக்கு பெரியவர்களுக்கு சிறிது எளிதே. ஆனால் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இது அல்ஜீப்ரா வில் உள்ள ஓர் பகுதியை  மிக எளிதாக அறிய இது உதவும் எனக் கருதியதால் இங்கு இடுகிறேன்.

விடை:
பூனை + மேஜை – ஆமை = 170
ஆமை + மேஜை – பூனை = 130

இரண்டு மேஜைகளின் உயரம் = 300 எனில் ஒரு மேஜையின் உயரம் = 150

மிக சுவாரசியமான கணக்கு - 2

திரு.வெ.இறையன்பு அவர்கள் குமுதம் இதழில் கொடுத்த ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்பட்ட கணக்குப் புதிராம்:

ஒருவர் ஒரு கடையில் இரு நூறு ரூபாய் பொருட்கள் வாங்குகிறார்.அதற்கு இரண்டாயிரம் ரூபாயை நீட்டுகிறார். கடைக்காரர் தன்னிடம் சில்லறை இல்லாத்தால் பக்கத்து கடையில் வாங்கி, பாக்கி ஆயிரத்து எண்ணூறு ரூபாயை வாங்க வந்தவரிடம் கொடுத்தார். பிறகு பக்கத்து கடைக்காரர் தன்னிடம் வந்த ஈராயிரம் ரூபாய் செல்லாத ரூபாய் தாள் என அறிந்து சொல்ல, கடைக்காரர் அவருக்கு இரண்டாயிரம் ரூபாயை தன்னிடம் பொருட்கள் வாங்கியவனை திட்டிக்கொண்டே தருகிறார்.
இப்போது கடைக்காரருக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு? 
A. RS 2200/-
B. RS 1000/-
C. RS 1800/-
D. RS 800/-
E. RS 2000/-
F. மேலுள்ளது எதுவும் இல்லை
******
நான் பள்ளி நாட்களில் ரசாயன பாடத்தில் ஆர்வமில்லாமலும் பயமும் கொண்டிருந்தேன்.ஆனால் கல்லூரியில் எனது ரசாயன பாடபேராசிரியர் இதை எப்படியோ அறிந்து நான் கணக்கில் மிக்க ஆர்முள்ளவன் எனவும் அறிந்து, கணக்கு தான் எல்லாவற்றிகும் அடிப்படை.கணக்கு நன்கு போடுபவன் ரசாயனமும் நன்கு உனக்கு வரும் என தெம்பூட்டி அதிலும் நலலறிவு பெற வகை செய்தார்.
சுயபுராணம் எதற்கென்றால், மேற்கண்ட கணக்கில் ஒரு அறிவியல் தத்துவம் ஒளிந்துள்ளது. எல்லோருக்கும் தெரிந்ததே..அதையும் சொல்லுங்களேன்.
************
விடை: ஒரு குடுவையில் தண்ணீரை ஊற்றி அதில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள எடைக்கல்லை போட்டால் அந்த எடையுள்ள அளவிற்கு தண்ணீர் வெளியேறும்... எவ்வளவுதான் சுற்றி சுற்றி வந்தாலும் செல்லாத ரூபாயின் மதிப்பு என்னவோ அதுதான் நட்ட மதிப்பு. அதாவது ரூ2000.

Monday, September 10, 2018

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:

எனது தமிழ் ஆசிரியப் பெருமகனார் 37-38 வருடங்கள் முன் சொன்னது - இன்றும் காதில் ரீங்கரிக்க ிறது. தமிழில் என்ன இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்தவன் எல்லாம் தெரிந்தவனா கிறான். அவனது தன்னம்பிக் கை, ஆளுமை போராட்ட உணர்வு, தீமை கொண்டு பொங்கும் குணம், இயல்/இசை/நாடக அறிவு/சமயம்/அறிவியல்/இலக்கணம்/கணக்கு........அய்யோ..சொல்லி மாளாது எனது அய்யனின் பெருமை. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல கோடி.

“ வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க 
பட்டென் வந்தது பரப்பு”
தாக்க = பெருக்க
வட்டத்தின் அரை = 2 π r / 2 = π r ; விட்டத்தின அரை = r
இரண்டையும் தாக்க, அதாவது பெருக்க π r x r = π r 2...கிடைத்தது வட்டப் பரப்பு...ஜென்மத்துக்கும் மறக்குமா ?

யாராகினும் இவ்வாறு வேறு தமிழ் செய்யுட்கள் இருந்தால் தயவு செய்து பகிர வேண்டுகிறேன்.

Sunday, September 9, 2018

பழங்கள் கணக்கிற்காண விடை

பதில் : முதலில் - மூத்தவன் 7 பழங்கள் ஒரு ரூபாய் வீதம் விற்கிறான். அப்போது என்னாகும்...மூத்தவனிடம் 7 ரூபாயும்(7x7=49) +ஒரு பழமும், இடையனிடம்..4 ரூபாயும்(4x7=28)+2 பழங்களும், கடையனிடம் 1 ரூபாயும்(1x7=7)+3 பழங்களும் இருக்கும்.
பிறகு, மூத்தவன், ஒரு பழத்தை 3 ரூபாய்-க்கு விற்கிறான்.அப்போது என்னாகும்...மூத்தவனிடம் 1 பழம் 3 ரூபாய் வீதம் விற்றதில் 3 ரூபாயும் ஏற்கனவே 7 ரூபாயும் சேர்ந்து அவனுக்கு 10 ரூபாய் கிடைக்கும்.
இடையனிடம் தற்போது 2 பழங்கள் இருக்குமல்லவா? அவைகளை விற்றதில் 2x3=6 ரூபாயும் ஏற்கனவே 4 ரூபாயும் சேர்ந்து அவனிடமும் 10 ரூபாய் வந்துவிடும்.
கடையனிடம், 3x3=9 ரூபாயும், ஏற்கனவே இருந்த 1 ரூபாயும் சேர்ந்து அவனிடமும் 10 ரூபாய் சேர்ந்துவிடும். தந்தை தன் பிள்ளைகளை நினைத்து பெருமிதம் அடைந்தார்.
நாமும் இப்படியும் கணக்குகளை அமைக்க முடியுமா என  நம்மை வியக்க வைத்த நம் முன்னோர்களை நினைத்து நாமும் பெருமிதம் கொள்வோம்-பல கோடி வந்தனங்கள் செய்வோம்.

Saturday, July 7, 2018

உயிரை மீட்டிய கருணை நாதர்

இம்மஹிமையை ஈரோடு திருமதி தமிழ்செல்வி ஞானப்ரகாசம் அவர்கள் மூலம் அறிந்தது. அவர்களுக்கு என் நன்றிகள்.

*****************************************************************************

பெரியவா சரணம்!

""ஏழு கோடி மந்திரம் இருந்தாலும் குருவின் வார்த்தைகளே மஹா பெரிய மந்திரம். அதுவே சக்தி. அந்த சக்தி நம்மில் இருக்கும் பொழுது வேறு எந்த கவலைகளும் கழிவுகளும் ஒட்டாது""

காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்

உயிரை மீட்டிய கருணை நாதர்

ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து

அடியேன் ஒரு மலைப் ப்ரதேசத்தில் சில வருடங்கள் தங்கினேன். அங்கு ஒவ்வொரு குருவாரம் காலையும் மஹா பெரியவாளின் மகிமையைப் போற்றும் சத் சங்கம், சில பக்தர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்கி நடத்திக் கொண்டிருந்தேன். அந்த மலைப் ப்ரதேசத்தின் குளிரையும், மழையையும் பாராது கலந்துக் கொள்ளும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது, மஹா பெரியவாளின் மீது அவர்கள் வைத்திருக்கும் பக்தியைக் கண்டு என் கண்கள் பனிக்கும். 

ஒரு குருவாரம் வழக்கம் போல் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. பஜனை முடியும் தருவாயில் அடியேன் இறுதியாக ஒரு பாடலைப் பாடக் கூட்டத்தினரும் பாடி முடித்தனர். பாடல் முடிந்த பின் அமைதியாக அமர்ந்திருந்த கூட்டத்திலுருந்து ஒரு பக்தர் எழுந்து நின்றார். அவரை அருகே வரும்படி அழைத்தேன். முன் வந்து நின்றவருக்கு சுமார் வயது 55லிருந்து 60க்குள் இருக்கும். எனக்கு வணக்கம் தெரிவித்தவர். 

“ஐயா நீங்கள் சற்று முன் பாடிய பாடலை மீண்டும் ஒருமுறை பாட முடியுமா?” என்றார். நான் மீண்டும் பாடினேன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. “ஐயா. நீங்கள் பாடிய பாடல் என் வாழ்வில் நடந்த சம்பவம். உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் எப்படிப் பாடினீர்கள்?” என்றார். “நான் பாடவில்லை. என் குரு நாதர் மஹா பெரியவா என்னைப் பாட வைத்தார். அவ்வளவுதான்” என்றேன். அவர் மீண்டும், “ ஐயா, மஹாப் பெரியவர் மிகப் பெரிய அதிசயத்தை என் வாழ்வில் நிகழ்த்தினார். அது தான் அந்தப் பாடல். அதை நான் இங்கு பகிர்ந்துக் கொள்ளலாமா?” எனக் கேட்டார். “ நிச்சயமாக, அது எங்கள் பாக்கியம்” என்றேன்.

அவர் கூட்டத்தை நோக்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது என பகிர ஆரம்பித்தார். 

“சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் என் வாழ்வில் நடந்த சம்பவம். என் தாத்தவும் , என் தகப்பனாரும் காஞ்சி மடத்துடன் மிகவும் தொடர்பு உடையவர்கள். மிகுந்த பக்தி உடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். என் தந்தைக்கு காஞ்சிப் பெரியவா மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் மஹா பெரியவாளை மட்டுமே தெய்வமாக வழி படுபவர். என் தந்தை கொண்ட ஈடுபாட்டின் பேரில் நானும் பல முறை காஞ்சி சென்று மஹா பெரியவாளைத் தரிசித்தது உண்டு. ஆனால் ஏதோ ஆலயங்களுக்கு சென்று வழி படுவது போல் சென்று விட்டு வருவேனேத் தவிர, என் தந்தை அளவு பக்தியும், ஈடுபாடும் மஹா பெரியவா மீது அப்பொழுது என் உள்ளத்தில் இல்லை. என் தகப்பனாரின் மறைவுக்குப் பின் நான் காஞ்சி செல்வது அடியோடு நின்று விட்டது.

திருமணம் முடிந்து குடும்பம் குட்டி என வாழ்ந்துக் கொண்டிருந்த நேரத்தில், என் 35 , 37 வயதில் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு, மீண்டு வர முடியாமல் கடன் வாங்கினேன். சில மாதங்களில் வாங்கியத் தொகைக்கு வட்டிக் கட்ட முடியவில்லை. எனவே வட்டிக் கட்ட மற்றொரு இடத்தில் கடன் வாங்கினேன். இப்படி ஒன்றின் தொடர்பாக மற்றொன்று என கடன் வாங்க , ஒரு நிலையில் பல இடங்களில் கடன் மட்டுமல்லாது, கடன் தொகையும் விஸ்வரூபம் எடுத்து நின்றது. பால் பாக்கி, மளிகை பாக்கி, வாடகை பாக்கி என அன்றாட செயல்களே பாதிக்கப்பட்டு நின்றது. நண்பர்கள் பகையானார்கள். 

அடுத்து என்ன செய்து மீள்வது என சிந்திக்க ஆரம்பிப்பதற்குள், ஏதாவது ஒரு கடன் கொடுத்தவர், வாசல் வந்து இறைத்து விட்டுப் போகும் சுடு சொல்லும், அதனால் உண்டாகும் அவமானமும் என்னை மேலும் சிந்திக்க விடாது, அந்த அவமானத்திலும் வேதனையிலும் என்னை சுழல வைத்தது. நிம்மதி இல்லாது துக்கத்தில் உழன்ற எனக்கு தூக்கம் ஏது? தூக்கம் என்பதை மறந்தேன். நல்ல மானம் மரியாதையுடன் வாழ்ந்த உயர்ந்த குடும்பம் என்னால் அவமானப்பட்டு நிற்கும் பொழுது மனம் கலங்கியது. வெளியே பையை எடுத்துக் கொண்டு செல்லும் மனைவி, அவமானத்தை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து, யாருக்கும் தெரியக் கூடாது என சமையல் அறையில் புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழும் பொழுது, என் உள்ளம் வெடித்துச் சிதறியது.

துக்கமும் துயரமும் வாட்ட மனம் ரணமாகிப் போன நிலையில் ஒரு நாள் முடிவு செய்தேன். என்னால் தானே என் குடும்பத்திற்கு இந்த நிலை. அவர்கள் படும் வேதைனையினால் நான் அடையும் கஷ்டத்தை தொலைக்க முடிவு செய்தேன். என் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. மிகுந்த விரக்தியுடன் அன்று இரவுப் பொழுதில் வீட்டை விட்டு கிளம்பி கடற்கரை நோக்கி நடந்தேன். ஆள் அரவமற்ற கடற்கரையின் தனிப் பகுதி. உயிரை விட்டு விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தது. கண் முன்னே தெரியும் கடல் தவிர பிற உலகம் மறைந்தது. கால்கள் தன்னிச்சையாக கடலை நோக்கி நடைப் போட்டது. அந்த நேரத்தில், எனக்கு பின்னால் ஒருவர் நடந்து வரும் பாத ஒலிக் கேட்டது. அதற்கு முக்கியத்துவம் தராமல் விரைவாக நடக்க முயன்றேன். மீண்டும் அதே பாத ஒலி. யாரோ பின் தொடரும் உணர்வு. என்னை மேலே நடக்க விடாது ஏதோ ஒன்று என்னைத் தடுத்து நிறுத்தியது. மெல்ல பின்னே திரும்பியவன் திடுக்கிட்டேன். 

அங்கு மஹாபெரியவா நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்டவன் உறைந்து விட்டேன். எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. நான் நானாக இல்லை. என்னை ஏதோ ஒன்று உந்திக் கொண்டிருக்க மடார் என அவர் பாதத்தில் விழுந்தேன். பாதத்தில் விழுந்தவன் எழுந்திருக்கவில்லை, நிமிரவில்லை. அவர் பேசுவது மட்டும் உன்னிபாகக் கேட்டது.

“ஏண்டா கஷ்டத்தை விட்டு விலகிப் போறதா நினச்சு உன் குடும்பத்துக்கு அதிக கஷ்டத்த கொடுத்துட்டுப் போறயேடா. உன் கஷ்ட காலத்ல நீ என்னை நினைக்கல.... ஆனா நான் உன்னை நினச்சேன் , கைவிடல. வீட்டுக்குப் போ.” அந்தத் தேனினும் இனியக் குரல் ஒலிக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக ரீங்காரமாக, அடுத்து என்ன நடந்தது என்றுத் தெரியாது, நான் சுய நினைவு இழந்தேன்.

நான் நினைவு வந்து கண்விழித்த பொழுது, எங்கும் ஒளிப் ப்ரகாசம். காலைப் பொழுதாகி, கதிரவன் ப்ரகாசித்துக் கொண்டிருந்தான். நான் எங்கு இருக்கிறேன் எனப் புரிந்து கொள்ள சில நொடிப் பொழுதானது. முதல் நாள் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. 

நான் மஹா பெரியவாளைக் கண்டது நிஜமா அல்லது கனவுக் கண்டேனா என ஒரு நொடிப் பொழுது மனதில் ஐயக் கேள்வி எழும்ப, அந்த நொடியில் அந்த பாத ஒலியும், அவரின் கருணை வார்த்தைகளும் எனக்குள் ரீங்காரம் எடுக்க ஆரம்பித்தது. அந்த ரீங்காரம் என் மனதில் மட்டும் ஒலிக்கவில்லை, என் சரீரம் எங்கும் ஒலித்தது. அது அற்புதமான உணர்வு. அதை உங்களிடம் விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. அந்த பாத ஒலியும் வார்த்தைகளும் இப்பொழுதும் என்னை விட்டு நீங்கவில்லை.

நான் எப்பொழுதெல்லாம் மஹா பெரியவாளின் முன் நிற்கிறேனோ அப்பொழுதெல்லாம் இந்த ரீங்காரத்தை உணர்கிறேன். இது பெரியவா எனக்கு கொடுத்த பாக்கியம். இப்பொழுதும் அதை உணர்ந்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்ற பொழுது அவர் உடம்பு சிலிர்க்க ஒரு நிமிடம் அதில் லயித்து , பின் தன் உரையைத் தொடர்ந்தார்.

“வந்தது மஹா பெரியவாதான் என ஊர்ஜிதமாக, என் குடும்ப நினைவு வர, ஓட்டமும் நடையுமாக இல்லம் வந்தேன். என் மனைவி என்னைக் காணாது வாசலில் கண்ணீரோடு பரிதவிப்புடன் நின்றுக் கொண்டிருந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு என்னை மன்னித்து விடு மன்னித்து விடு எனக் கதறினேன். ஒன்றும் புரியாது என்னை ஏறிட்டவளிடம் நான் உன்னையும் குடும்பத்தையும் பற்றி கவலைப் படாது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தேன் என சொல்ல என் மனைவியின் உடல் பதறுவதைக் கண்டேன். என்ன காரியம் செய்ய நினைத்தீர்கள் என அலறியவளை ஆசுவாசப் படுத்தி அமர வைத்து நடந்தவைகளை விவரிக்க விவரிக்க அவள் ஆச்சர்யத்தில் உறைந்து விட்டாள். ஒன்றும் பேசாது பூஜை அலமாரியிலிருந்த மஹா பெரியவாளின் படத்தை முன் வைத்து கொண்டு, என் கணவர் உயிரைக் காப்பாற்றி எனக்கு மாங்கல்யப் பிச்சை தந்து விட்டீர்கள். பெரியவாளே உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என தன் மாங்கல்யத்தைப் பிடித்துக் கொண்டு அழுதாள். 

அன்று எனக்குள் ஒரு புது சக்தி வந்தது போல் இருந்தது. அன்று முழுதும் என் மனதில் ஆயிரம் கேள்விகள். உலகை மறந்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு கடல் நோக்கிப் போய்க் கொண்டிருந்த என் காதில் எப்படி அந்த பாத சப்தம் தெளிவாகக் கேட்டது? அப்படி என்றால் என் காதில் அந்த சப்தத்தை ஒலிக்கச் செய்தவர் அவர் தான் எனப் புரிந்தேன். கடன் சுமை தீரவும் இல்லை, குறையவும் இல்லை. ஆனாலும் எத்தனயோ மாதங்களாய் ஒரு நொடிப் பொழுதும் நீங்காது என் மனதை துன்பப்படுத்திக் கொண்டிருந்த - அரித்துக் கொண்டிருந்த கடன் சுமை இன்று என் மனதை ஏன் அரிக்கவில்லை என எண்ணிப் பார்த்தேன்,. இத்தனை நாட்களாய் இல்லாத சக்தி இன்று புதிதாய் பாய்வதை உணர்கிறேனே என சிந்திக்க, எனக்கு ஒன்று புரிந்தது. என் உள்ளத்தில் குருவின் வார்த்தைகள் இடைவிடாது ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது.

ஏழு கோடி மந்திரம் இருந்தாலும் குருவின் வார்த்தைகளே மஹா பெரிய மந்திரம். அதுவே சக்தி. அந்த சக்தி நம்மில் இருக்கும் பொழுது வேறு எந்த கவலைகளும் கழிவுகளும் ஒட்டாது. தாமரை இலை தண்ணீர்ப் போல் இருக்கும் என்ற அனுபவத்தைப் பெற்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக, மஹாப் பெரியவா எதற்காக என்னை தடுத்து ஆட்கொண்டார்? நானோ அவரை வணங்கவில்லை. அப்படி இருந்தும் என் மீது ஏன் இவ்வளவு கருணை என எண்ணிய பொழுது என் மனைவியின் புலம்பல் என் காதில் கேட்டது. “அப்பா இருந்த வரைக்கும் மடத்துக்குப் போனேள்......” என்று அவள் தனக்குள் பேசிக் கொண்டே போக எனக்கு பதில் கிடைத்து விட்டது.

என் அப்பாவின் நினைவு வந்தது. அவர் மஹா பெரியவாளின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். எந்த செயலும் அவர் உத்தரவும் ஆசியும் வாங்காது செய்ய மாட்டார். அவர் கோவிலுக்கு சென்று பார்த்ததில்லை. ஆனால் தோன்றிய பொழுதெல்லாம் மஹா பெரியவாளைத் தரிசிக்க கிளம்பி விடுவார். அவர் மஹா பெரியவா மீது கொண்டிருந்த பக்திக்காக தான் பெரியவா என்னைக் காப்பாற்றினார் என தோன்றியது. ‘முந்தைப் பிறவியின் பெரும் பயனோ, எந்தைதாய் செய்த தவப் பயனோ’ என்ற மஹா பெரியவா பற்றிய பாடல் வரிகள் தான் இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. இது என் தந்தையின் தவப் பயன். இவ்வளவு பக்திக் கொண்ட என் தந்தையைப் பார்த்தும், மஹா பெரியவாளின் மகிமை அறியாத பேதையாய் இருந்திருக்கிறேனே, அவரை வழிப் பட்டிருந்தால் இந்த கஷ்ட நிலையே வந்திருக்காதே, நான் எவ்வளவு பெரிய முட்டாள், என நன்கு புரிந்துக் கொண்டேன். என் தந்தையை கை எடுத்து வணங்கினேன்.

அன்றைய நாளும், மறு நாளும் என் மனம் மஹா பெரியவாளின் நினைவாகவே இருந்தது. பல மாதங்களாக தூக்கம் என்றால் என்ன என்பதையே மறந்திருந்த நான் இரு நாட்களும் நன்றாக உறங்கினேன். எனக்குள் ஒரு உற்சாகமும் தெளிவும் இருந்தது. என் உற்சாகத்தைக் கண்ட மனைவி ஆறுதல் அடைந்தாள். என் மனதில் பயமும் கோழைத்தனமும் அறவே இல்லை, எப்படியும் இந்த சூழலிலிருந்து வெளிவர அந்த மஹா பெரியவரே வழிக் காட்டுவார் எனத் திடம் கொண்டேன்.

மூன்றாம் நாள் விடியல் காலை அழைப்பு மணி ஒலிக்க கதவைத் திறந்த எனக்கு ஆச்சர்யம். பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் என் தூரத்து உறவினர் வந்திருந்தார். என் தந்தை இருந்த காலங்களில் இரு குடும்பத்துக்கும் நல்ல போக்குவரத்து இருந்தது. பின்னர் கொஞ்சம் குறைந்து போனது. ஆனாலும் அவர் இங்கு வரும் பொழுது என் வீட்டில் தான் தங்குவார். வந்தவரை ஓய்வு எடுக்கச் சொன்னேன். வந்தவர் சில மணி நேர ஓய்வுக்குப் பின் என் அருகே அமர்ந்து தான் வந்த நோக்கத்தை தெரியப்படுத்தினார். ” நேற்று முன் தினம் இந்த பகுதியைச் சேர்ந்த நண்பரை பார்த்தேன். அப் பொழுது உன்னைப் பற்றி விசாரித்தேன். அவர் உன் நிலையை சொன்னார். கேட்டது முதல் என் உள்ளம் பதறிப் போச்சு. லெட்டர் போடலாமானு நினைச்சேன். நீ உண்மைய சொல்ல மாட்டானு தோணித்து. ஏதோ ஒன்னு என்னை இருக்க விடாம அரிச்சுட்டே இருந்தது. பணத்தை ரெடி பண்ண ஒரு நாள் ஆச்சு. பணம் கைல வந்தவுடனே உன்னை நேரடியா பாத்து பேசலாம்னு வந்தேன்” என்றார். அவர் பையிலிருந்து ஒரு மிகப் பெரியத் தொகையை எடுத்து என் கையில் கொடுத்து வைத்துக் கொள் என்றார். நான் மறுக்க , சரி இதை நான் செய்யும் உதவியாகக் கொள். 10 வருடமோ 20 வருடமோ எப்பொழுது முடியுமோ திருப்பிக் கொடு என்றார். அவர் மிகுந்த உள்ளன்போடு கூறிய வார்த்தைகள் என் நெஞ்சைக் கரைய வைத்தன. கண்ணீரோடு வாங்கிக் கொண்டு அவரின் அன்புக்கு குடும்பமே நன்றி செலுத்தினோம். அவரை இங்கு அனுப்பிய மஹாபெரியவாளின் முன் நின்ற்றேன். இறைவா என் மீது உனக்கு இவ்வளவு கருணையா எனக் கதறினேன்.

அவர் தந்த தொகையைக் கொண்டு முக்கியமான சிறு சிறு கடன்களை அடைத்தேன். கை இருப்பாக கனிசமானத் தொகையை இருத்திக் கொண்டு, பட்சணம் செய்து விற்று பொருள் ஈட்டுவது என நானும் என் மனைவியும் முடிவு செய்தோம். ஒரு வாரத்தில் அனைத்தையும் சரிசெய்து விட்டு , என் மனைவி செய்த பட்சணங்களை இரண்டு மூன்று தூக்கில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு தெருவாக சென்று வியாபரம் செய்தேன். மாலைக்குள் அனைத்தும் விற்றுவிடும். இப்படி 10 நாட்கள் சென்றிருக்கும், பதினோராம் நாள் நான் நான்கு தெரு தாண்டுவதுற்குள் என் பட்சணம் அனைத்தும் காலியாகி விட்டது. இது மஹாபெரியவாளின் கருணை. இப்படி அந்தப் பகுதி முழுதும் பட்சணம் பிரபல்யமாக , ஒரு சிறு கண்ணாடி போட்ட பட்சன தள்ளு வண்டி ஒன்றை தெரிந்தவர் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி, சரி செய்து, இன்னும் பல வகையான பட்சணங்களை செய்து விற்றேன். மதியத்திற்குள் அனைத்தும் முடிந்து விடும். மீண்டும் மாலை வியாபாரம் செய்வேன். ஆனால் ஒரு நாள் கூட வியாபாரம் நடக்கவில்லை என பட்சணங்களை திருப்பிக் கொண்டு வந்ததில்லை. அவரின் கருணையால் வியாபாரம் பெருக, ஒன்றரை வருடங்களில் கணிசமாகப் பணம் சேர்ந்து விட, ஒரு சிறு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, ஆட்கள் வைத்து பட்சணம் மற்றும் பேக்கரி வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். 

மூன்றரை வருடங்களில் அனைத்து கடன்களும் அடைந்து, எனக்கு உதவிய உறவினரின் தொகையையும் செலுத்தி முடித்தேன் என்பது என்னால் நம்ப முடியாத ஆச்சர்யமாக இன்றும் உள்ளது. இப்பொழுது பல ஊர்களிலும் சொந்த இடத்தில் கிளை வைத்து சந்தோஷமாகவும் சுபிட்சமாகவும் இருக்கிறேன். துன்ப காலத்தில் என் உயிரை மீட்டுத் தந்து, வாழ்க்கையை செப்பணிட்டு சீராக்கி, உயர்வடையச் செய்து என் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த அவர் மஹா மஹா பெரியவர்; மஹா மஹா பெரியவர்” என நா தழு தழுக்க மஹா மஹா என அழுத்தமாக சொல்லிய பொழுது அந்த மஹா, மஹா வின் அர்த்தம் அவருக்குப் புரிந்து இருந்தது. 

அவர் மேலும் தொடர்ந்தார். “ நான் என் நண்பரைக் காண இங்கு வந்தேன். இன்று விடியற் காலை என் ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இங்கு மஹா பெரியவாளின் பேரில் கூட்டம் நடப்பதுக் கண்டு மேலும் பயணிக்க முடியாமல் ஏதோ என்னை உந்த அமர்ந்து விட்டேன். த்யானம், பிரார்த்தனை பஜனை என இப்படி ஒரு சத் சங்கத்தை பார்த்த்தில்லை. இன்று என் ஆத்மாவே ஆனந்தத்தில் மிதக்கிறது. என் வாழ்க்கையில் மஹா பெரியவாளின் கருணையை பகிர்ந்துக் கொள்ள சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி. இன்றும் நான் என் குழுந்தைகளுக்கு செல்வ வளத்தை விட்டு விட்டு செல்ல வேண்டுமென்பதில் குறியாய் இல்லை. அவர்களுக்காக மஹா பெரியவாளிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரார்த்தித்து, அந்த பிரார்த்தனை வளத்தை கொடுத்து விட்டு செல்ல நினைக்கிறேன் , என் தந்தை எனக்கு தந்தது போல. “
எங்கோ இருக்கும் உங்களை இங்கு வர வழைத்து, பகிர்ந்து கொள்ள வைத்தவர் அவர். அந்த மஹா பெரியவளுக்கு கோடி வந்தனம் என்று சொல்லி மீண்டும் அந்தப் பாடலை கூட்டத்தினர் அனைவரும் ஒன்றாகப் பாடி ஆனந்தமாய்க் கலைந்தோம்.

அந்தப் பாடல்:

தீராக் கஷ்டத்தில் உம்மை மறந்து பிரிந்து

கடற்கரை சென்று உயிர் மாய்க்க செல்லுகையில்

பாதம் சத்தம் கேட்டு திரும்புகையில்

பூரண தரிசனம் காட்டி பக்தனை மீட்டிய ஐயனே

மஹா பெரியவாளின் அதிசயத்தையும் அற்புத்தையும் கேள்விப்பட்டு பக்திக் கொண்ட மக்கள் எத்தனையோ பேர். ஆனால் மஹாபெரியவாளே அதிசயத்தைக் காட்டி அதன் மூலம் பக்திக் கொண்ட இவர் எப்பேர்பட்ட பாக்கியசாலி என மகிழ்ந்தேன்.

இதயம் நொறுங்குண்டோர் தன்னை நாடுகையில் 

மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய்

வளம் தரும் மாமுனியே சரணம் சரணமையா!

Friday, July 6, 2018

மிக சுவாரசியமான கணக்கு

ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். தான் சாகப்போகும் காலத்தில் தன் பிள்ளைகள் தன் சொத்தெல்லாம் நிர்வகிக்கும் திறன் கொண்ட அறிவாளிகளா அல்லது ஒன்றுக்கும் உதவாத அறிவிலிகளா என சோதித்து அறிய ஆவல் கொண்டார்.
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார்.  அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!

மஹா பெரியவாளின் கருணையா ? காருண்யமா?

பெரியவா சரணம்

""பெரியவாளின் பார்வை ஒரு பரம்பரையின் மீது விழுந்து விட்டால் அவர்கள் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் கைத் தூக்கி விட்டு விடுவார் ""

பம்பாயைச் சேர்ந்த ஏழை இளைஞர். இவரின் தந்தை பம்பாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் சிறிய பணியில் இருந்தார். மிக சொற்ப வருமானம். இளைஞர், அவருக்கு ஒரு தங்கை என இரு குழந்தைகள். தன் சொற்ப வருமானத்தில் இரு குழந்தைகளையும் படிக்க வைத்து குடும்பத்தையும் சிரமத்தோடு நடத்தி வந்த தந்தை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அப்பொழுது அந்த இளைஞர் பியுசி படித்துக் கொண்டிருந்தார். இளைஞரின் படிப்பு அத்துடன் நிற்க குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல். எங்கு தேடியும் வேலைக் கிடைக்காததால், அவ்வப் பொழுது கிடைக்கும் சிறு பணிகளைச் செய்து, பொருள் ஈட்டினார். தாயும் தன் பங்குக்கு அக்கம் பக்கம் உதவி செய்து பணம் ஈட்டினார் என்றாலும் நிரந்தரப் பணி இல்லாததால் வருமானமும் நிரந்தரமாக வரவில்லை. மிகவும் கஷ்ட நிலைதான் என்றாலும் அந்த கஷ்ட நிலையிலும் தன் தங்கையை படிக்க வைத்தார். வந்த வருமானத்தை வைத்து தாய் எப்படியோ சமாளித்து வந்தார். அவர்கள் பொருளில் வறியவர்களாக இருந்தாலும், குணத்தில் செல்வந்தர்களாக வளர்க்கப்பட்டிருந்தனர். அமைதியான நடத்தை, நல்ல ஒழுக்கம், சிறந்த பக்தி, பெரியவர்களிடத்து மரியாதை, நேர்மை என நல்ல பண்புடன் இருந்தனர். 

ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். மன வேதனையும், வறுமையும் வாட்ட தாயின் பொருளுதவியும் நின்று போன நிலையில் குடும்பம் தத்தளித்தது. தங்கையின் படிப்பு பத்தாம் வகுப்புடன் நின்றது. தாய் ஈட்டிய சிறு பொருள் கொண்டு வாரம் ஐந்து நாட்கள் உணவருந்திய குடும்பம் மூன்று நாட்கள் கூட சமாளிக்க முடியாது திண்டாடியது. தாங்க முடியாத சூழலில் தங்கை வீட்டு வேலை செய்து பொருள் ஈட்டுவதாக சொல்ல, அண்ணனின் உள்ளம் வலித்தது. தன்னை விட ஏழு வயது சிறிய தன் தங்கையை, தன் தந்தை மறைவுக்குப் பின், தந்தையாக பொறுப்புக்களை தோளில் சுமந்து, எப்பாடு பட்டாவது பட்டாதாரியாக்கி ஒரு நல்ல வேலையில் அமர்த்தி விட வேண்டும் என கனவு கண்டவர்; மிகுந்த பாசம் கொண்டவர்; தான் கஷ்டப்பட்டாலும் தன் தங்கை கஷ்டப் படக் கூடாது என கண்ணும் கருத்துமாக வளர்த்தவர், தங்கையின் சொல் கேட்டு கண்ணீர் சிந்தினார். மனமும் கனவும் பெரிதாக இருந்து என்ன பயன் , அதை செயல்படுத்த சரியான சூழ் நிலை இல்லையே; அந்த நொடிப் பொழுதை கடந்து தான் ஆக வேண்டும் என உண்மை உறைக்க, தங்கையின் பிடிவாதத்திற்கு ஒப்புக் கொண்டார். 

மூன்று மாதங்கள் வலியும் வேதனையுமாய் கழிய, தன் தந்தையின் நெருங்கிய சொந்தக்காரர் திரு நெல்வேலியில் இருப்பது நினைவுக்கு வந்தது. அவரிடம் சென்று உதவிக் கேட்போம். அவர் சிபாரிசில் அங்கேயே ஏதாவது வேலை கிடைத்தால் தங்கையையும் அழைத்துக் கொண்டு வந்து விடலாம் என புதுக் கனவு கண்டார். கஷ்டப்பட்டு போக்குவரத்து செலவுக்கு என சிறிது பொருள் சேமித்து, உறவினருக்கு தன் வருகை குறித்து தபால் எழுதி விட்டு, தங்கையையும் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டு திருநெல்வேலிப் புறப்பட்டார். திருநெல்வேலியில் தன் உறவினர் வீட்டுக்குச் சென்றவருக்கு பெரும் அதிர்ச்சி . வாசலில் ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அக்ரஹாரத்தில் அக்கம் பக்கத்தவரிடம் விசாரிக்க, ‘அவர்கள் வெளியூர் சென்று விட்டார்கள், எப்பொழுது வருவார்கள் எனத் தெரியாது’ என அனைவரும் ஒரே பதிலையே கூறினர். மிகவும் நெருங்கிய உறவு என்பதால் முழுமையாக அவரை நம்பி வந்து விட்டார். கையிலோ மிகவும் சொற்ப பணம். திரும்பிப் போக முடியுமா என்பதே கேள்விக்குறி. அங்கு வேறு யாரையும் தெரியாது. பொழுது சாய்ந்து விட்டதால், சரி நாளை அவர் வருகிறாரா என பார்ப்போம் என முடிவு செய்து பிரயாணக் களைப்பில் ஒரு வீட்டுத் திண்ணையில் அயர்ந்து உறங்கி விட்டார். 

காலையில் பொது இடத்தில் குளித்து விட்டு அரை குறையாக வயிற்றை நிரப்பி விட்டு உறவினருக்கு காத்திருந்தார். அன்றும் அவர் வரவில்லை. அன்றைய பொழுது பயனில்லாது போயிற்று. மறு நாள் பொழுது விடிந்தது. அவருக்கும் தான் வாழ்க்கையில் புதிய உதயம் தோன்றியது. வழக்கம் போல் உறவினருக்கு காத்திருந்தவருக்கு ஏமாற்றம் தான். நம் வருகை அறிந்து உறவினர் பயணப் பட்டிருப்பாரோ என சந்தேகம் எழுந்தது. மேற் கொண்டு என்ன செய்வது எனப் புரியவில்லை.

அந்த சமயத்தில் நமது மஹா பெரியவா திரு நெல்வேலியில் முகாமிட்டிருந்தார். அக்ரஹாரத்து மக்கள் அவரைத் தரிசிக்க செல்ல இவருக்கும் தரிசிக்க ஆவல் பிறந்தது. அவர் முகாமிட்டிருந்த இடம் சென்றார். கூட்டம் வழிய அந்த கூட்டத்துடன் அவரும் கலந்தார். தரிசிக்க முடியுமா என்று தெரியவில்லை. பொறுமையுடன் காத்திருந்தார். நேரம் நகர்ந்துக் கொண்டிருந்த்து. அந்த சமயம் பின் இருந்து ஒருவர் வந்து, “ என்னப்பா, பெரியவாளைத் தரிசிக்க வந்தியா? வா” என்று அவரை முன் நோக்கி அழைத்துச் சென்று பெரியவா முன் நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

மஹா பெரியவா முன் நின்ற இளைஞர் நமஸ்கரித்து எழுந்தார். அவரின் உள்ளத்து சோகத்தையும், கள்ளமில்லா உள்ளத்தையும் படம் பிடித்த மஹா பெரியவா, “என்னப்பா எங்கேந்து வர?” எனத் துவக்கினார். “பம்பாய்லேந்து வரேன்” என வார்த்தைகள் வாயிலிருந்து தடங்கி தடுக்கி விழுந்தது. “யாரு... இன்னார் பையனா நீ?” எனக் கேள்வி எழுப்ப, இளைஞர் ஆம் எனத் தலை அசைத்தார். மேலும் அவரைப் பேச விடாது பெரியவாளே பேசத் தொடங்கினார். “ உங்க அப்பாவத் தெரியும்பா. அவர் மடத்துக்கு வந்திருக்கார். உங்க தாத்தாவுக்கும் மடத்துக்கும் தொடர்பு உண்டு. உன் அப்பா அம்மா காலமாயிட்டா இல்லியோ. இப்ப நீ என்ன பன்ற?”

“வேலை ஒன்னும் இல்லைப் பெரியவா” நா தழு தழுத்தது.

“உன்னோட வேற யார் இருக்கா?”

“ ஒரு தங்கை மட்டுமதான்”

“அவ என்ன பண்றா?” 

“ பத்தாவது படிச்சுட்டு வீட்டு வேலை பாக்கறா” என்றார் கண்ணீர் வழிய. சில நொடி அமைதிக்குப் பின் மஹா பெரியவா தொடர்ந்தார். “நீ யாரை நம்பி இங்க வந்தியோ அவா உன் வருகை தெரிஞ்சு வேற ஊர் போய்ட்டா. இனி அவாளுக்காக காத்திருக்காத. இன்னிக்கே ஊருக்கு கிளம்பு. இனிமே நீ யாரையும் நம்பி இருக்க வேண்டாம். கவலைப்படாம போ” என்று சொல்ல இளைஞர் ஒன்றும் பேசவில்லை. கைகட்டி நின்றார். மஹா பெரியவா அருகே இருந்தவரிடம், “யார் இவனை அழைச்சுண்டு வந்தா?” என்று கேட்க, அந்த அன்பர் முன் வந்து, “நீங்க தான் பெரிவா என்னை அழைச்சுண்டு வரச் சொல்லி சொன்னேள்..” என்று இழுக்க, “ நானா?” என பெரியவா கேட்க, எல்லோரையும் நற்செயலுக்கு ஏவிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் குரு(றும்பு) நாதரின் கேள்விக்கு என்ன பதில்? --- வந்தவர் அமைதி காக்க, “ சரி , நீ ஒண்ணு செய். இவனுக்கு ஆகாரம் பண்ணி வெச்சு, அவன் பம்பாய் போய் சேர ரயில் டிக்கெட்டும் வாங்கிக் கொடு” என்று சொல்ல வந்தவர் அதை பெரும் பாக்கியமாக எடுத்துக் கொண்டார். இளைஞர் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க, மஹபெரியவா ஆசியுடன் அனுப்பி வைத்தார்.மஹாபெரியவாளைத் தரிசித்த நினைவுகள் நீண்ட பயணத்தின் துணை வர இளைஞரும் பம்பாய் ரயில் நிலையம் வந்தடைந்தார். ரயில் நிலைய நுழைவு வாயிலில் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க, சட்டைப் பையில் கை விட டிக்கெட் அங்கு இல்ல. பேன்ட் பாக்கெட்டில் கை விட அங்கும் இல்லை. அவசரம் அவசரமாக தான் ஒரு மாற்றுத் துணி வைத்திருந்த துணிப் பையில் தேட டிக்கெட் அங்கும் இல்லை. பரிசோதகர் அவரை தனியே ஓரமாக நிறுத்தி வைத்தார். ரயில் உள்ளே இரு பரிசோதகர் வந்த பொழுது இருந்த டிக்கெட் எப்படி காணாமல் போனது என மூளை சிந்திக்க, உடம்பு பதற்றமடைந்து மீண்டும் மீண்டும் தேட, உள்ளம் மட்டும் மஹா பெரியவாளின் நினைவுகளிலிருந்து அகலாது நின்றது. கையிலோ மிகவும் சொற்ப பணம், தண்டனைக்குரிய தொகையை எப்படியும் செலுத்த முடியாது. எதையும் மேற்கொண்டு சிந்திக்க முடியாது நின்றார். 

டிக்கெட் பரிசோதகர் தன் பணி முடித்த பின் இவர் பக்கம் திரும்பினார். 

“ நீ ஏன் ஓரமா நிக்கற?”

“ சார் நீங்கதான் என்னிடம் டிக்கெட் இல்லை என்று நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்” என்றான். 

பார்வையில் தமிழர் எனப் புரிந்து கொண்ட பரிசோதகர் “ ஓ தமிழா.. இல்லியே வேற காரணத்துக்குன்னா ஒன்ன நிறுத்தி வெச்சேன்”

என்று அவர் சிந்திக்க, அவர் யோசனைக்கு ஒன்றும் எட்டவில்லை. இல்ல டிக்கெட் இல்லனு தான் என்னை நிறுத்தி வைத்தீர்கள் என அவர் மீண்டும் சொல்ல இவர் மறுக்க, இப்படியே போய்க் கொண்டிருந்த்து. அங்கு அவருள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர் நம் மஹா பெரியவர் அல்லவா? (பரிசோதகருக்கு இளைஞரின் நேர்மையை படம் பிடித்து காட்டிக் கொண்டிருந்தார். )மஹா பெரியவா தான் எண்ணிய வேலை நடந்து முடியும் வரை விலகுவதில்லை. அனைவரையும் கைப்பாவையாக்கி நடனம் ஆட வைப்பவரின் பொம்மலாட்டம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது. 

யோசித்துக் கொண்டே நடந்தவர் அந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு தன் அலுவலக அறை வந்தார். அவனை அமர வைத்து அவனைப் பற்றி கேட்டு விட்டு எங்கிருந்து வருகிறாய் என கேட்க, டிக்கெட்டைத் தவறவிட்ட எனக்கு அபராதம் விதிக்காது அமர வைத்து தன்னைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறாரே என குழப்பமாக இருந்தது. இருந்தாலும் பெரியவர் - தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் என எண்ணி இளைஞர் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். தான் திரு நெல்வேலி சென்றதையும் உறவினர் இல்லாததால் செய்வதறியாது நின்றதையும் மஹா பெரியவாளைத் தரிசித்ததையும் - ஏன் சொல்கிறோம் எனப் புரியாமலே கொட்டிக் கொண்டிருந்தார். காஞ்சி மஹா பெரியவாளைத் தரிசினம் பண்ணியா காஞ்சிப் பெரியவாளையா - அந்த மஹானையா என கண்கள் அகல விரிய - உள்ளம் மத்தாப்பாய் - மலர மீன்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தவர் பெரியவாளை நினைத்து தலை மீது கரம் குவித்து வணங்கினார். அந்த இளைஞர் மீது மேலும் ஆர்வம் ஏற்பட அவன் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். 

அந்த இளைஞர் அனைத்து விவரங்களையும் கூற, அந்த இளைஞரின் நேர்மை, பணிவு என அனைத்தும் அவரைக் கவர தன் முகவரியைத் தந்து இன்றே நீ உன் தங்கையை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்கு வா என்று அனுப்பி வைத்தார். அன்றைய நிகழ்வுகளை இளைஞரால் நம்ப முடியவில்லை இது நாம் தரிசித்த மஹா பெரியவாளின் கருணைதான் எனப் புரிந்து அவருக்கு மனமார நன்றி செலுத்தினார். டிக்கெட்டைத் தொலைக்கச் செய்து கருணையும் காட்டி விட்டாரே என உள்ளம் உருக நன்றி செலுத்தினார். வீட்டிற்கு வந்து தன் தங்கையிடம் நடந்தவைகளைக் கூறி, அன்று மாலையே டிக்கெட் பரிசோதகரின் இல்லத்துக்கு இருவரும் சென்றனர். முதல் பார்வையிலேயே அண்ணன் தங்கையை தம்பதியருக்கு பிடித்து விட அவர்களை தங்கள் இல்லத்திலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டனர்.

டிக்கெட் பரிசோதகர் அந்த இளைஞரை கல்லூரியிலும். தங்கையை மேற்படிப்பிலும் சேர்த்தார். குழந்தைப் பாக்கியம் இல்லாத அத் தம்பதியர் - இருவரையும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல் பார்த்துக் கொண்டனர். எங்கோ அனாதையாய் கிடந்த தங்கள் மீது பாசத்தைப் பொழியும் தம்பதியர் மீது இவர்களும் மிகுந்த அன்பு காட்டினர். நல்ல ஒழுக்கம், அடக்கம், பணிவு, பக்தி, மரியாதை, சொந்த பெற்றோரைப் போல் கண்ணும் கருத்துமாய் இயல்பாய் அக்கறைக் காட்டுவதும் பாசத்தைப் பொழிவதுமென அவர்களின் நடவடிக்கை அனைத்தும் தம்பதியரைக் கரைய வைத்தது. பிள்ளைப் பாசத்தையே அனுபவித்திராத அவர்களுக்கு, இவர்கள் இருவரும் காட்டிய பாசம் உள்ளத்தை உருக்கியது. வயதான காலத்தில் மஹா பெரியவாதான் இவர்களைக் காண வைத்து அனைத்து சந்தோஷங்களையும் தந்து ஆனந்தப் பட வைத்துள்ளார் என மஹா பெரியவாளை வணங்கித் தம்பதியர் நன்றி கூறினர்.

மாதங்கள் நகர்ந்தன. தம்பதியர் இருவரும் ஏக மனதாக முடிவு செய்து, அவர்கள் இருவரையும் தங்கள் வாரிசாக சட்டப்படி தத்து எடுத்துக் கொண்டனர். மஹா பெரியவாளைத் தரிசித்த நாள் முதல் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடந்து வரும் அதிசயத்தை உணர்ந்த இளைஞர் பக்தியுடன் நாள் தவறாது நன்றி செலுத்தினார். ஆதரவற்று பெரும் பள்ளத் தாக்கில் வீழ்ந்திருந்த தனக்கு அன்புக் கரம் நீட்டி ஆசியுடன் பெரும் பாக்கியத்தையும் அள்ளிக் கொடுத்த மஹா பெரியவாளே அவரின் முழு முதற் தெய்வமானார். அனாதையாய் நின்ற தனக்கும் தன் தங்கைக்கும் அன்பு பெற்றோர்களாகி வளமும் தந்த டிக்கெட் பரிசோதகர் தம்பதிகளை தன் சொந்த பெற்றோராகவே பூஜித்தார். வருடங்கள் நகர்ந்தன. தம்பதியர் தங்கையை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். இளைஞரும் ஒரு தனியார் அலுவலகத்தில் ஒரு பணியில் அமர்ந்தார். இளைஞருக்கும் திருமணம் செய்ய வரன் தேடிய பொழுது வரன் அமையாது, வயது கடந்துக் கொண்டே போனது. தம்பதியர் இளைஞரின் பூரண சம்மதத்துடன் ஒரு அனாதை விடுதியில் ஒரு நல்லப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து முடித்தனர்.

வருடங்கள் சென்றன. டிக்கெட் பரிசோதகர் தான் சம்பாதித்த சொத்து மற்றும் பூர்விக சொத்து என அனைத்து சொத்துக்களையும் நான்குப் பிரிவாகப் பிரித்தார். மனைவி மற்றும் சட்டப்படி தத்து எடுத்துக் கொண்ட மக்களுக்கு கொடுத்தது போக மீதி ஒரு பங்கை சமூக சேவைக்கு என ஒதுக்கினார். அந்தத் தொகை மூவர் ஒப்புதலின் பேரில் செலவழிக்கப்பட வேண்டும் என எழுதி வைத்தார். பரிசோதகர் மற்றும் சில ஆண்டுகளில் அவர் மனைவியும் இறந்து விட சொத்து சற்று பெரியத் தொகையாக இருந்ததால் அதை எந்த விதத்தில் சமூகப் பணிக்கு செலவிடுவது, அதை எப்படிக் கையாள்வது எனக் குழப்பம் ஏற்பட தன்னை அனைத்திலும் வளமாக்கிய தன் தெய்வம் மஹா பெரியவாளைத் தேடி இளைஞர் காஞ்சி வந்தார். 

பெரியவாளின் முன் கண்ணீர் பெருக்கோடு கைக் கூப்பி நின்றார். அவர் வடித்த கண்ணீர் பெரியவாளின் பாதத்தில் நன்றியாகப் போய்க் கலந்தது. அந்தக் கண்ணீரே மஹா பெரியவாளுடன் உரையாடியது. உணர்ச்சிப் பெருக்கோடு நின்றவர் ஆசுவாசப் படுத்திக் கொள்ள பெரியவா மௌனமாய் இருந்தார். சில நிமிடங்களில் சுதாரித்த இளைஞர், தன் குழப்பத்தை தெரிவித்து தங்களின் சித்தப்படி செய்ய விழைகிறேன் என்றார். “பணத்தை அனாதைக் குழந்தைகளின் கல்விக்கும், மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் செலவிடு. நீ செய்யும் உதவி உன் இடது கைக்கு கூடத் தெரியக் கூடாது. அவர்களுக்கு தொண்டு செய்வதையே இனி உன் முழு நேரப் பணியாகக் கொள்” என ஆசிக் கொடுக்க , இளைஞர் தன் குழப்பம் தீர்ந்த மகிழ்வில் ஆசியுடன் உத்தரவு பெற்றார். இல்லம் வந்தவர் தன் பணியை ராஜினாமா செய்து விட்டு, மஹாப் பெரியவாளின் ஆசிப்படி தொண்டாற்ற ஆரம்பித்தார்.

இளைஞரின் தாத்தா மஹாபெரியவாளைத் தரிசித்தவர். அவர் தந்தையும் பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்றவர். நம் மஹா பெரியவாளின் பார்வை ஒரு பரம்பரையின் மீது விழுந்து விட்டால் அவர்கள் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் கைத் தூக்கி விட்டு விடுவார். இது அந்த பரம்பரையினரின் விசுவாசத்தைப் பொறுத்தது. ஆதரவற்று அனாதயாய் நின்ற அண்ணனையும் தங்கையையும் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து அனைத்திலும் வளமாக்கினார். குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு முதுமையில் போற்றிப் பேண அருமையான செல்வங்களைத் தந்து பாக்கியம் தந்தார். அனாதையாய் நின்ற ஒரு குடும்பத்திற்கும், முதியவர்களுக்கும் ஆசி தந்த மஹா பெரியவா அந்த செல்வ வளத்தையே மேலும் மேலும் பல அனாதைகளுக்கும் முதியவர்களுக்கும் பயன்படும்படி செய்தார். இது மஹா பெரியவாளின் கருணையா... காருண்யமா... 

மஹா பெரியவாளின் ஒரு ஆசி எத்தனை ஆசிகளாக பெருகி அதனால் எத்தனை மக்கள் பாக்கியம் அடைகிறார்கள்.

எண்ணிலடங்கா ஆசிகளையும் அனுக்ரஹங்களையும் வாரி வாரி வழங்கி தன் புகழை மறைப் பொருளாக வைத்துச் சென்ற மாமுனியே சரணம் சரணமையா!

(ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து)

விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி

ஸ்ரீ மடத்து சன்யாசிகளுக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை மிகவும் கடுமையாக கடைபிடித்தவர் மஹா பெரியவர் எனப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள். அந்த காலத்து வழக்கப்படி விதவை கோலம் பூணாத விதவைகளுக்கு அவர் தரிசனம் தர மாட்டார். இருந்தாலும் கைவிடவில்லையே! படிக்கும்போது கண்ணீர் வந்துவிட்டது. கதையை படியுங்கள். கொஞ்சம் நீண்ட பதிவு. வாட்ஸப்பில் வந்ததில் முதல் முறையாக உருப்படியாக வந்தது!

----

காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்

மாமுனியின் கருணையா – கொடையா

(ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து...)

விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி

அடியேன் கல்கத்தாவில் பயணிகள் கப்பலில் வரும் என் நண்பரைக் காணத் துறைமுகம் சென்றேன். கப்பல் இரண்டு மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது. அவருக்காக காத்திருக்க முடிவு செய்து அந்த சாலையில் இருந்த ஒரு ஹோட்டலின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது ஒரு சிறிய ஹோட்டல். வருவோர் போவோர் அதிகம் இருந்த நிலையில் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் பார்வை கல்லாவில் இருந்தவரின் மீது செல்ல, அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் ஒரு படம் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பார்வையை இழுக்கும் வகையில் இருந்தது.. அந்தப் படம் என்னை ஈர்க்க, நான் அருகே சென்று பார்க்க, அது மஹா பெரியவாளின் படம். கல்கத்தாவில் 90 சதவிகித இடங்களில் காளி மற்றும் ராம கிருஷண பரமஹம்சர் விவேகானந்தர் படங்களைப் பார்த்த எனக்கு, என் குரு நாதரைக் கண்டவுடன் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம். படத்தைக் காட்டி யார் இவர் என வினவ அந்த நபர் உள்ளம் பூரித்து கண்கள் விரிய “என் தாக்குர்ஜி என் தாக்குர்ஜி” என பரவசப் பட்டார். இவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என அடியேன் கேட்க அந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல நொடியும் தாமதிக்காது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் பேசத் தொடங்கினார். அவர் உள்ளத்தில் பெருகிய பக்தி – மடை திறந்த வெள்ளம் என வார்த்தைகளாக பெருக்கெடுத்தது. பக்தியில் நனைந்து நனைந்து வந்து விழுந்த குரு நாதரைப் பற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனாக என் காதில் பாய்ந்தது. பக்தியில் பொங்கி பொங்கி கொப்பளித்த அவர் உள்ளம் சற்று சம நிலை அடைய, அடியேன் அவர் பேச்சின் இடை இடையே மஹாபெரியவாளைப் பற்றி ஒரிரு வரிகள் சொல்ல, தன் பேச்சை நிறுத்தியவர் கண்களில் வியப்புடன் தாக்குர்ஜி பற்றி தெரிந்தும் என்னிடம் தெரியாதது போல் கேட்டீர்களா என வாய் விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லா அவரின் குழந்தை உள்ளம் தெரிந்தது.

அருகே இருந்த பணியாளரிடம் கல்லாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து அழைத்து ஒரு இருக்கையில் அமர்த்தினார். இருவரும் மஹாபெரியவாளைப் பற்றி பேசி பேசி களிப்படைய, நேரம் போனதே தெரியவில்லை. கப்பல் வந்துவிட்ட அறிவிப்பு வர அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். என் கைகளை அழுத்திப் பிடித்தவர் உங்களைப் பிரிய ஏனோ மனம் வரவில்லை, இன்று மாலை என் இல்லம் வாருங்கள். தாக்குர்ஜி என் குடும்பத்துக்கு செய்த ஒரு உன்னதமான அதிசயத்தை சொல்லுகிறேன், வருவீர்களா என ஏக்கத்துடன் கேட்க - அவரிடம் , ஐயா அதை விட பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும் கட்டாயம் வருகிறேன் என சொல்லி அவர் முகவரியைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.

அன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பய பக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார், அந்த புனிதப் பாத்திரம் சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது.

கல்கத்தாவைச் சேர்ந்த இளம் விதவை. கணவர் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். கணவர் காலத்தில் வியாபாரம் முடங்க ஆரம்பிக்க, அவள் திருமணம் முடித்த சில வருடங்களில் வியாபாரம் முழுதுமாக நொடித்து விட்டது. வியாபாரத் தோல்வி கணவர் உள்ளத்தையும் உடலையும் உருக்க, நோய்வாய்ப்பட்டு சில வருடங்களிலேயே அவர் இறந்தும் போனார். இளம் விதவை - ஐந்து குழந்தைகளுக்குத் தாய் - கணவர் இறந்த மறு நாளே புகுந்த வீட்டினர் அவளை அண்ட விடாது ஒதுக்கியும் ஒதுங்கியும் விட்டனர். பிறந்த வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் எனக் கதவைத் தட்டியவளுக்கு, பிறந்த வீட்டார் ராசியில்லாதவள் அமங்கலி என இரட்டைத் தாழ்ப்பாள் போட்டனர்.

தன் உடலையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு - ஒன்றும் புரியாத பிஞ்சுகளாய் இருக்கும் ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாரம் - எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் ராசியில்லாதவள் என சூட்டிய முள் கிரீடம் - எல்லாம் அவளை அழுத்தியது. கணவர் சேமித்து வைத்து விட்டுப் போன சிறு தொகையைக் கொண்டு பசி பட்டினி இல்லாது குடும்பத்தை நடத்தினாள். அதுவும் சில காலமே. வருடங்கள் செல்ல செல்ல இரு வேளை சோறு ஒரு வேளையானது. பின்னர் அதுவும் கஞ்சியாக மாறியது. கைப் பணம் கரைய கரைய அச்சமும் கவலையும் சூழ்ந்தது. குடும்ப வருமானத்திற்கு குப்பை பொறுக்குவது என முடிவு செய்தாள். நாள் முழுதும் அலைந்து பெரிய அலுவலகங்களாக சென்று காகிதங்களை பொறுக்கி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தினாள். துறைமுகப் பகுதியில் வாகனங்களிலிருந்து விழும் நெல் அரிசி கோதுமை போன்ற தானியங்களை சாலையைப் பெருக்கி எடுத்து வந்தாள். சிதறிய தானியங்களைக் கொண்டு தன் பிள்ளைகளின் வயிற்றுக்கு கஞ்சி ஊற்றினாள். ஆனால் எப்படி ஐந்து பிள்ளைகளையும் கரை சேர்ப்பேன் என்ற கவலை அவளைத் தினமும் வாட்டியது. குடும்பம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. கணவர் இறந்து இப்படியே ஐந்து வருடங்கள் போய்விட்டது.

இந் நிலையில் நமது மஹாபெரியவா கல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசித்த மக்கள் அவரைப் பற்றி பலவாறு ப்ரமிப்புடனும் பக்தியுடனும் பேச பேச அந்த பேச்சுக்கள் இவள் காதையும் எட்டியது. அவளுக்கும் அவர்கள் சொல்லும் தாக்குர்ஜியை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது. அவரை தரிசித்து விட்டு வந்தால் என் வாழ்வில் ஒரு விடியல் இருக்கும் என எண்ணினாள். இரவெல்லாம் அதே நினைவுடன் உறங்கியவள், மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு, கையில் ஒரு காலி எண்ணெய் தூக்கை எடுத்துக் கொண்டு மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடம் வந்தாள். தாக்குர்ஜியை சுலபமாக சந்தித்து ஆசி பெற்றுவிடலாம் என நினைத்து வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றாள். வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும், அவர்கள் அவளைக் கண்டு விலகிச் செல்வதையும் கண்ட பொழுது தான் - அவளுக்கு அவளின் நிலைப் புரிந்தது. தாக்குர்ஜியை காண வந்த கூட்டத்தினரின் மீது அவள் பார்வை சென்றது. அனைவரும் நல்ல ஆடை அணிந்தவர்கள் – படித்தவர்கள் – உயர் அதிகாரிகள் – என பலதரப்பட்ட மக்கள். தன்னை எண்ணினாள். எண்ணெய் ஆட்டுவதைக் குலத் தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளின் தலையில் ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. வறண்ட கூந்தல்; எத்தனை துவைத்தும் நீங்காது அழுக்குப் படிந்து போன சேலை; தன் வாழ்க்கை தரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும் கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடை. எப்படி இந்தக் கூட்டதில் நம்மை இணைத்துக் கொள்வது; கூட்டத்தில் கலக்க முயற்சித்தால் நிச்சயம் விரட்டப் படுவோம் என புரிந்துக் கொண்டாள். அந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க உள்ளத்தில் அச்சம் சூழ்ந்தது. ஆனால் தாகுர்ஜியிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போகவில்லை.

கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றாள். கூட்டத்தினர் பார்வையாலையே அவளை விரட்ட தள்ளி நின்றாள். அங்கிருந்தவர்கள் மேலும் அவளை விரட்ட - மேலும் மேலும் ஒதுங்கினாள் . இப்படியே கூட்டத்தை விட்டு 60 - 70 அடி தள்ளி விரட்டப்பட்டாள். கூட்டம் கலைந்தவுடன் அவரைத் தரிசிக்கலாம் எனக் காத்திருந்தாள். ஆனால் வருவதும் போவதுமாக இருந்த மக்கள் கூட்டம் குறையவில்லை. நேரம் நகர்ந்துக் கொண்டே போனது. மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் வந்து போயின. தன் வாழ்க்கை சம்பவங்களால் கண்களும் மனதும் பொங்கியது, தன் நிலையைப் புரிந்துக் கொண்டவள் தாகுர்ஜியை அருகில் சென்று ஆசி பெறும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்து விட்டால் போதும் , தன் வாழ்க்கையில் மாற்றம் வரும் என பரிபூரணமாக நம்பினாள் .கூட்டத்தை விட்டு தள்ளி ஒடுங்கி நின்றவளின் பார்வை மட்டும் தாக்குர்ஜி இருந்த இடத்தை விட்டு விலகாது இருந்தது.

சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தவளுக்கு இன்னும் மஹா பெரியவாளின் தூர தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால் மஹா பெரியவா அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் – உள் முகமாக. அருகே இருந்த தன் உதவியாளரை அழைத்தார். சில குறிப்புகள் சொல்லி அவளிடம் இருக்கும் பாத்திரத்தை வாங்கி வரும் படி சொன்னார். உதவியாளரிடம் பாத்திரத்தை தந்தவளின் கண்கள் தாக்குர்ஜியை காணத் துடித்தது. தாக்குர்ஜி என்னை உள்முகமாக பார்த்துவிட்டார். எனக்கு அவரின் தரிசின பாக்கியம் கிடைக்குமா என உள்ளம் ஏங்கியது. உதவியாளார் சென்ற பாதையிலேயே தன் கண் பார்வையை செலுத்தினாள். உதவியாளர் சென்ற பொழுது ஒரு இடைவெளி கிடைக்க அந்த இடைவெளியில் தாக்குர்ஜியைப் பார்த்தாள். பரவசப்பட்டாள். கை தொழுது நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தாகுர்ஜியின் முன் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டத்திலிருந்து நீரை ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மறைக்க இந்த தரிசினமே போதுமானது என திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திரமாக பாவித்து தன்னுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். அவள் உடலும் உள்ளமும் ஆனந்தப் பரவசப் பட கால்கள் சிறிது தள்ளாட அருகே இருந்த சுவரில் சாய்ந்தாள்.

கண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தவளுக்கு மஹாபெரியவாளின் வார்த்தைகள் இடி முழக்கமாக கேட்டது. “பரவாயில்லை இத்தனை நேரம் காத்திருந்தாயே. உண்மையில் நீ மிகவும் பொறுமைசாலி” என சொல்ல, அந்தப் பெண், “ தாக்குர்ஜி நான் பொறுமைசாலியல்ல. எத்தனையோ மக்கள் தங்களிடம் ஆசி பெறவும் அனுக்ரஹம் பெறவும் காத்திருக்க, வந்த அனைவருக்கும் பல மணி நேரமாக இடை விடாது ஆசி தந்து கருணை மழை பொழிந்துக் கொண்டிருப்பதோடு எங்கோ நின்று கொண்டிருந்த இந்த விதவைக்கும் அல்லவா அனுக்ரஹம் காட்டினீர். என் காத்திருப்பில் சுய நலம் இருக்கிறது. ஆனால் தங்களை நாடி வந்த பக்தர்களின் நலம் கருதிய தங்களின் பொறுமையிலோ அன்பும் கருணையும் அல்லவா வழிந்துக் கொண்டிருக்கிறது. நான் பொறுமைசாலி அல்ல. தாங்கள் தான் பொறுமையின் பிறப்பிடமும் அதிபதியும்” என்றாள். “அம்மா உன் நிலை அறிவேன். இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” என ஆசி வழங்கினார். பரவச நிலையிலிருந்து வெளி வந்து சம நிலை அடைந்தாள். தாகுர்ஜியின் திசை நோக்கி மீண்டும் நன்றியோடு வணங்கினாள். பாத்திரத்தை இறுக்கி பிடித்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

மனதில் தாக்குர்ஜியின் தரிசனமும் அவரின் வார்த்தைகளுமே வியாபித்திருந்தது. ஐந்து கிலோமீட்டருக்கும் மேலான நடை பயணம் களைப்பைத் தரவில்லை. பரவச நிலைக்குப் பின் உலகமே அவளுக்கு புதிதாகத் தோன்றியது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாராமும் - பிறர் சூட்டிய பட்டங்களும் - கவலையும் போன இடம் தெரியவில்லை. தாகுர்ஜியின் தரிசனம் கிடைத்துவிட்டது. அவரின் ஆசி வார்தைகளையும் கேட்டு விட்டேன் . இனி தாக்குர்ஜியின் ஆசியே என் குடும்பத்தை வழி நடத்தும் என திடம் கொண்டாள். ஒரு வழியாக தாக்குர்ஜியை தரிசித்த மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தாள். தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் தாக்குர்ஜி ப்ரசாதமாக கொடுத்த நீர் , பாத்திரம் முழுதுமாக சுமார் ஒன்றரை லிட்டர் நிரம்பி இருக்க, அதை வேறு பாத்திரத்தில் நிரப்ப நினைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றினாள். ஊற்றிய பொழுது நடந்த அதிசயத்தை அவள் கண்களால் நம்ப முடியவில்லை.

அவள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்தது ப்ரசாத நீர். ஆனால் அதை மற்றொரு பாத்திரத்தில் நிரப்பிய பொழுது அது எண்ணெய்யாக வழிந்தது. வழிந்துக் கொண்டே இருந்தது. நடக்கும் ஆச்சர்யத்தை அவளால் நம்ப முடியவில்லை. தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள் . நீர் தான் இருந்தது. அது எப்படி வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று? தாக்குர்ஜி தாகுர்ஜி என வாய் முணுமுணுத்தது. உள்ளம் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் திளைத்திருக்க , மஹா பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவள் மனதில் மோதின. “இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” ஆசி வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது புரிய ஆரம்பித்தது. பட்டுப் போன குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை தாக்குர்ஜி மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டார் எனப் புரிந்துக் கொண்டாள். இனி இந்த எண்ணெய்யை விற்று குடும்பத்தை நடத்துவது என முடிவு செய்தாள். 

‘தாக்குர்ஜியை நான் அருகில் சென்று கூட வணங்கவில்லை. அவர் முன் என் நிலையை எடுத்தும் சொல்லவில்லை. எங்கோ ஒதுக்கப்பட்டு ஓரமாக நின்ற இந்த விதவையின் மீது தன் உள்ளக் கருத்தைப் பதித்து எத்தனை பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி ஆசியும் அளித்தார். இதுவரை ஒரு முறை கூட இந்த தாக்குர்ஜியைப் பற்றி நான் அறிந்ததும் இல்லை. நாளும் தொழுததும் இல்லை. ஆனால் எத்தனை பெரிய கருணையைப் பொழிந்திருக்கிறார்’ என எண்ணி எண்ணி அவள் உள்ளம் கசிந்தது. என் தாகுர்ஜிக்கு எப்படி நன்றி செலுத்துவேன் என கலங்கினாள். அவள் துக்கம் சந்தோஷம் ஆச்சர்யம் என அனைத்தும் அழுகையிலேயே கலந்து கரைந்தது. மனதில் தாகுர்ஜியின் ஆசிகளும் அவருக்கான நன்றிகளுமே பதிந்து இருந்தது. தெளிவுக் கொண்டு எழுந்தவள் அந்த பாத்திரத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினாள். பாத்திரத்தோடு ரகசியத்தைக் காக்க தன் வாயையும் மனதையும் சேர்த்து அந்தப் பெட்டியில் பூட்டினாள்.

மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு பெட்டியிலிருந்த தாக்குர்ஜி ஆசிர்வதித்து தந்த பாத்திரத்தை தொட்டு வணங்கினாள். மனதில் தாகுர்ஜியை நினைத்தாள். வார்த்தைகள் உள்ளத்திலிருந்த வெடித்துக் கிளம்பின.

நான் விழுந்துப் போன நேரத்தில் என் மக்கள்

எல்லோரும் நகைத்தனர்

வியாதியஸ்தி (ராசியில்லாதவள்) என சொல்லி என் 

ஜனமே என்னை வெறுத்தது

என்னை சுகப்படுத்தி புது வாழ்வு தந்த தாக்குருவே!

என்று மனம் உருகிப் பிரார்த்தித்தாள். (இதுவே அவளின் குரு மந்திரம் ஆனது. ஒவ்வொரு நாளும் இதை சொல்லியப் பின்னே எண்ணெய் எடுத்தாள்)

மஹா பெரியவா ஆசிக் கொடுத்தப் பாத்திரத்தை சாய்த்தாள். ஒரு குடம் நிறைய நிரப்பினாள். பாத்திரத்தைப் பூட்டினாள். எண்ணெய்யை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் அறியா வண்ணம் மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் சென்று வியாபாரம் செய்தாள். கையில் குரு நாதரின் கருணையால் கிடைத்தப் பணம் அவளுக்கு திடனைத் தந்தது. அந்த வருவாய் அவளின் குடும்ப ஜீவனத்திற்குப் போதுமானதாக இருந்தது. தாகுர்ஜிக்கு மறவாது நன்றி செலுத்தினாள்.

மறு நாள் பாத்திரத்திலிருந்து ஒரு குடம் நிறைய எண்ணெய் எடுத்தாள். வியாபாரம் செய்தாள். ஒவ்வொரு நாளும் ஒரு குடம் என்பதை அளவாக வைத்துக் கொண்டாள். அவள் அதற்கு மேல் என்றுமே எடுக்கவில்லை. அந்தக் கட்டுப்பாட்டை அவள் தனக்குத் தானே விதித்துக் கொண்டாள். இப்படியே காஞ்சி மாமுனியின் வாக்குப்படி அவள் தன் குடும்பத்தை நடத்தினாள்.

வருடங்கள் கடந்தன. பரிதாப நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. மூத்த மகன் டீக் கடை வைத்து வியாபாரம் செய்தான். நான்கு பெண் குழந்தைகளுக்கும் உரிய வயதில் கடன் இல்லாது திருமணமும் முடித்தார் அந்தத் தாய். ஒரு சிறு வீடும் அவர்களுக்கு சொந்தமானது. தாகுர்ஜியின் ஆசியில் மகனின் வியாபாரம் சிறக்க அவன் சிறு ஹோட்டல் வைக்கும் அளவு உயர்ந்தான். மகனின் திருமணமும் நடந்தது. பாரத்தை எப்படி சுமப்பேன் என போராடித் தவித்த அந்த விதவைத் தாய் மாமுனியின் கருணையால் இப்பொழுது பெரும் நிம்மதி அடைந்தாள். 17 ஆண்டுக் காலம் அவரின் கருணையால் ஜீவிதம் நடந்தது. இனி தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என உள்ளம் நிறைவுக் கொள்ள நினைவெல்லாம் தாக்குர்ஜியாகிப் போனார்.

ஒரு நாள் இரவு தாக்குர்ஜியின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் பெருக தொழுது நின்றாள். இரவு தாக்குருஜியின் தரிசினம் கிடைத்தது.

மஹரிஷியே மாமுனியே

சித்தனே சுத்தனே

சர்வனே சத்தியனே

நீர் செய்த உபகாரங்கள்

கணக்காலே எண்ண முடியுமா

என தொழ

தாக்குருஜியின் வார்த்தைகள் இடியாய் அவளுள் ஒலித்தன.

ஆதி அன்பு என்றும் குன்றிடாமல்

பேரின்பம் என்றும் பொங்கிட

நீடித்த ஆசிகள் இருக்கும்.

என்றார் மாமுனி கருணை நாதர்.

17 ஆண்டுக் காலம் முடியும் தருவாயில் அவள் சிறு நோய்வாய்ப் பட தாக்குர்ஜி குறிப்பிட்டக் காலம் முடிந்து விட்டதை அறிந்தாள். தன் ஜீவிதம் முடியப் போவதையும் அறிந்தவள் தன் மகனிடம் பாத்திரத்தை ஒப்படைத்து அனைத்து ரகசியத்தையும் கூறினாள். இனி இதிலிருந்து எண்ணெய் வராது. அதன் பெலன் முடிந்தது. தாகுர்ஜியின் கருணையால் நாமும் நன்றாக இருக்கிறோம் என்றாள். ஒரிரு நாளில் தாக்குர்ஜியின் நினைவாலேயே அவள் உயிரும் பிரிந்தது.

“ என் தாய் இத்தனை ஆண்டுக் காலம் எங்கள் குடும்பத்துக்குக் கூடத் தெரியாது ரகசியத்தைக் காத்து வந்தது எனக்கு பிரமிப்பைத் தந்தது. என் தாய் சிறு வயது முதல் எங்களுக்கு யார் மூலமோ கிடைக்கப் பட்ட தாக்குர்ஜியின் படத்தைக் காட்டி காட்டி பக்தியை ஊட்டி வளர்த்திந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்தது முதல் தாக்குர்ஜியைத் தவிர வேறு தெய்வம் தெரியாது. என் தாய் மூலம் எப்பொழுது அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டேனோ அன்று முதல் என் தாக்குர்ஜியின் மீது எனக்கு இருந்த பக்தி பன்மடங்காகியது. என் தாய் மூலம் ஆறு ஜீவன்களின் வாழ்வைக் காத்து உயர்த்திய அவரின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் வந்தது. அவரை காஞ்சி சென்று சந்தித்த பின் தான் என் மனம் அமைதி அடைந்தது. என் தாய் அந்த பவித்ர பாத்திரத்தை என்னிடம் தந்து இதை பாதுகாத்து போற்று – என்றும் நம் தாகுர்ஜிக்கு நன்றி சொல்ல மறக்காதே என்றார். என் தாக்குருஜியின் கருணையாலும் கொடையாலும் ஆசியாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது” எனக் கண்கள் கலங்க பக்தியோடு கூறினார் அந்த ஹோட்டல் உரிமையாளர். 

இந்த நிகழ்வைக் கேட்ட அடியேன் என் குரு நாதர் மஹா பெரியவாளின் சூட்சும வார்த்தைகளைக் கண்டு வியந்தேன். பட்டுப் போன தொழில் துளிர்த்து தழைக்கும் அதாவது பெருகும் என்ற ஆசி வார்த்தைகள். தன் சிறு கமண்டத்திலிருந்து வார்த்த நீர் எப்படி ஒன்றரை லிட்டர் பாத்திரத்தை நிரப்பியது. அங்கேயே குரு நாதர் அமுதசுரபியின் தத்துவத்தைக் காட்டி விட்டாரே. குரு நாதர் இப்படி ஒரு அமுத சுரபியை அப் பெண்ணுக்கு வழங்கினார் என்றால் அந்தத் தாய் எப்படிப்பட்ட குணவதியாக இருந்திருக்க வேண்டும். குரு நாதர் அவரைப் பொறுமைசாலி என்ற பொழுது அவள் பெருமைக் கொள்ளவில்லை. தன்னைத் தாழ்த்தி குருவை வாழ்த்தி வணங்கினாள். அவரின் அடக்கமும் நன்றியுமே அவரின் தூய மனதைக் காட்டுகிறது. ராசியில்லாதவள் என தூற்றிய மக்களின் வார்த்தைகளை பொய்ப்பிக்கும் விதமாக மஹா பெரியவா ஆசி கொடுத்த அமுத சுரபி ஒவ்வொரு நாளும் அவள் ஊற்ற ஊற்ற பொங்கிப் பெருகும் படி அல்லவா ஆசிக் கொடுத்தார். அந்தத் தாயோ கிடைத்த அமுத சுரபியை அந்த வறுமை நிலையிலும் துஷ்பிரயோகம் செய்யாது இது போதும் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தாள் என்றாள், மஹா பெரியவா அவளின் குணத்தைப் புரிந்து அல்லவா இப்படிபட்ட அமுத சுரபியை வழங்கியுள்ளார். அவள் தன் குடும்பப் பொறுப்பை முடிக்கவும் மற்றும் அவள் ஜீவிதக் காலத்தையும் தன் தீர்க்க தரிசனத்தில் அறிந்து 17 ஆண்டுகள் அந்த அமுதசுரபிக்கு பெலன் தந்தார். மஹா பெரியவா கொடுக்கும் ஆசியில் தான் எத்தனை நுணுக்கங்கள்! பரிதாப நிலையிலிருந்த அந்தத் தாயின் நிலையை உயர்த்தி பல ஜீவன்களை தழைக்கச் செய்த மஹா பெரியவாளின் கருணை மனதில் கசிய கண்களில் கண்ணீர் துளிர்க்க விடை பெற்றேன்
.

பக்தர் குறைக் கேட்டு அச்சத்தை நீக்கி அருள காத்திருக்கின்றீரே, அக் கருணை எங்களைக் காத்தருளட்டும்!

(ஸ்ரீ மும்பை விஜயம் ஸ்வாமிகள் அருளிய காஞ்சி 6-10-8 ம் பீடாதிபதியின் ஸ்தோத்ரமாலா விலிருந்து..)

மாமுனியே சரணம் சரணமையா!