Saturday, July 7, 2018

உயிரை மீட்டிய கருணை நாதர்

இம்மஹிமையை ஈரோடு திருமதி தமிழ்செல்வி ஞானப்ரகாசம் அவர்கள் மூலம் அறிந்தது. அவர்களுக்கு என் நன்றிகள்.

*****************************************************************************

பெரியவா சரணம்!

""ஏழு கோடி மந்திரம் இருந்தாலும் குருவின் வார்த்தைகளே மஹா பெரிய மந்திரம். அதுவே சக்தி. அந்த சக்தி நம்மில் இருக்கும் பொழுது வேறு எந்த கவலைகளும் கழிவுகளும் ஒட்டாது""

காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்

உயிரை மீட்டிய கருணை நாதர்

ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து

அடியேன் ஒரு மலைப் ப்ரதேசத்தில் சில வருடங்கள் தங்கினேன். அங்கு ஒவ்வொரு குருவாரம் காலையும் மஹா பெரியவாளின் மகிமையைப் போற்றும் சத் சங்கம், சில பக்தர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்கி நடத்திக் கொண்டிருந்தேன். அந்த மலைப் ப்ரதேசத்தின் குளிரையும், மழையையும் பாராது கலந்துக் கொள்ளும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது, மஹா பெரியவாளின் மீது அவர்கள் வைத்திருக்கும் பக்தியைக் கண்டு என் கண்கள் பனிக்கும். 

ஒரு குருவாரம் வழக்கம் போல் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. பஜனை முடியும் தருவாயில் அடியேன் இறுதியாக ஒரு பாடலைப் பாடக் கூட்டத்தினரும் பாடி முடித்தனர். பாடல் முடிந்த பின் அமைதியாக அமர்ந்திருந்த கூட்டத்திலுருந்து ஒரு பக்தர் எழுந்து நின்றார். அவரை அருகே வரும்படி அழைத்தேன். முன் வந்து நின்றவருக்கு சுமார் வயது 55லிருந்து 60க்குள் இருக்கும். எனக்கு வணக்கம் தெரிவித்தவர். 

“ஐயா நீங்கள் சற்று முன் பாடிய பாடலை மீண்டும் ஒருமுறை பாட முடியுமா?” என்றார். நான் மீண்டும் பாடினேன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. “ஐயா. நீங்கள் பாடிய பாடல் என் வாழ்வில் நடந்த சம்பவம். உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் எப்படிப் பாடினீர்கள்?” என்றார். “நான் பாடவில்லை. என் குரு நாதர் மஹா பெரியவா என்னைப் பாட வைத்தார். அவ்வளவுதான்” என்றேன். அவர் மீண்டும், “ ஐயா, மஹாப் பெரியவர் மிகப் பெரிய அதிசயத்தை என் வாழ்வில் நிகழ்த்தினார். அது தான் அந்தப் பாடல். அதை நான் இங்கு பகிர்ந்துக் கொள்ளலாமா?” எனக் கேட்டார். “ நிச்சயமாக, அது எங்கள் பாக்கியம்” என்றேன்.

அவர் கூட்டத்தை நோக்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது என பகிர ஆரம்பித்தார். 

“சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் என் வாழ்வில் நடந்த சம்பவம். என் தாத்தவும் , என் தகப்பனாரும் காஞ்சி மடத்துடன் மிகவும் தொடர்பு உடையவர்கள். மிகுந்த பக்தி உடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். என் தந்தைக்கு காஞ்சிப் பெரியவா மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் மஹா பெரியவாளை மட்டுமே தெய்வமாக வழி படுபவர். என் தந்தை கொண்ட ஈடுபாட்டின் பேரில் நானும் பல முறை காஞ்சி சென்று மஹா பெரியவாளைத் தரிசித்தது உண்டு. ஆனால் ஏதோ ஆலயங்களுக்கு சென்று வழி படுவது போல் சென்று விட்டு வருவேனேத் தவிர, என் தந்தை அளவு பக்தியும், ஈடுபாடும் மஹா பெரியவா மீது அப்பொழுது என் உள்ளத்தில் இல்லை. என் தகப்பனாரின் மறைவுக்குப் பின் நான் காஞ்சி செல்வது அடியோடு நின்று விட்டது.

திருமணம் முடிந்து குடும்பம் குட்டி என வாழ்ந்துக் கொண்டிருந்த நேரத்தில், என் 35 , 37 வயதில் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு, மீண்டு வர முடியாமல் கடன் வாங்கினேன். சில மாதங்களில் வாங்கியத் தொகைக்கு வட்டிக் கட்ட முடியவில்லை. எனவே வட்டிக் கட்ட மற்றொரு இடத்தில் கடன் வாங்கினேன். இப்படி ஒன்றின் தொடர்பாக மற்றொன்று என கடன் வாங்க , ஒரு நிலையில் பல இடங்களில் கடன் மட்டுமல்லாது, கடன் தொகையும் விஸ்வரூபம் எடுத்து நின்றது. பால் பாக்கி, மளிகை பாக்கி, வாடகை பாக்கி என அன்றாட செயல்களே பாதிக்கப்பட்டு நின்றது. நண்பர்கள் பகையானார்கள். 

அடுத்து என்ன செய்து மீள்வது என சிந்திக்க ஆரம்பிப்பதற்குள், ஏதாவது ஒரு கடன் கொடுத்தவர், வாசல் வந்து இறைத்து விட்டுப் போகும் சுடு சொல்லும், அதனால் உண்டாகும் அவமானமும் என்னை மேலும் சிந்திக்க விடாது, அந்த அவமானத்திலும் வேதனையிலும் என்னை சுழல வைத்தது. நிம்மதி இல்லாது துக்கத்தில் உழன்ற எனக்கு தூக்கம் ஏது? தூக்கம் என்பதை மறந்தேன். நல்ல மானம் மரியாதையுடன் வாழ்ந்த உயர்ந்த குடும்பம் என்னால் அவமானப்பட்டு நிற்கும் பொழுது மனம் கலங்கியது. வெளியே பையை எடுத்துக் கொண்டு செல்லும் மனைவி, அவமானத்தை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து, யாருக்கும் தெரியக் கூடாது என சமையல் அறையில் புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழும் பொழுது, என் உள்ளம் வெடித்துச் சிதறியது.

துக்கமும் துயரமும் வாட்ட மனம் ரணமாகிப் போன நிலையில் ஒரு நாள் முடிவு செய்தேன். என்னால் தானே என் குடும்பத்திற்கு இந்த நிலை. அவர்கள் படும் வேதைனையினால் நான் அடையும் கஷ்டத்தை தொலைக்க முடிவு செய்தேன். என் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. மிகுந்த விரக்தியுடன் அன்று இரவுப் பொழுதில் வீட்டை விட்டு கிளம்பி கடற்கரை நோக்கி நடந்தேன். ஆள் அரவமற்ற கடற்கரையின் தனிப் பகுதி. உயிரை விட்டு விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தது. கண் முன்னே தெரியும் கடல் தவிர பிற உலகம் மறைந்தது. கால்கள் தன்னிச்சையாக கடலை நோக்கி நடைப் போட்டது. அந்த நேரத்தில், எனக்கு பின்னால் ஒருவர் நடந்து வரும் பாத ஒலிக் கேட்டது. அதற்கு முக்கியத்துவம் தராமல் விரைவாக நடக்க முயன்றேன். மீண்டும் அதே பாத ஒலி. யாரோ பின் தொடரும் உணர்வு. என்னை மேலே நடக்க விடாது ஏதோ ஒன்று என்னைத் தடுத்து நிறுத்தியது. மெல்ல பின்னே திரும்பியவன் திடுக்கிட்டேன். 

அங்கு மஹாபெரியவா நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்டவன் உறைந்து விட்டேன். எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. நான் நானாக இல்லை. என்னை ஏதோ ஒன்று உந்திக் கொண்டிருக்க மடார் என அவர் பாதத்தில் விழுந்தேன். பாதத்தில் விழுந்தவன் எழுந்திருக்கவில்லை, நிமிரவில்லை. அவர் பேசுவது மட்டும் உன்னிபாகக் கேட்டது.

“ஏண்டா கஷ்டத்தை விட்டு விலகிப் போறதா நினச்சு உன் குடும்பத்துக்கு அதிக கஷ்டத்த கொடுத்துட்டுப் போறயேடா. உன் கஷ்ட காலத்ல நீ என்னை நினைக்கல.... ஆனா நான் உன்னை நினச்சேன் , கைவிடல. வீட்டுக்குப் போ.” அந்தத் தேனினும் இனியக் குரல் ஒலிக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக ரீங்காரமாக, அடுத்து என்ன நடந்தது என்றுத் தெரியாது, நான் சுய நினைவு இழந்தேன்.

நான் நினைவு வந்து கண்விழித்த பொழுது, எங்கும் ஒளிப் ப்ரகாசம். காலைப் பொழுதாகி, கதிரவன் ப்ரகாசித்துக் கொண்டிருந்தான். நான் எங்கு இருக்கிறேன் எனப் புரிந்து கொள்ள சில நொடிப் பொழுதானது. முதல் நாள் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. 

நான் மஹா பெரியவாளைக் கண்டது நிஜமா அல்லது கனவுக் கண்டேனா என ஒரு நொடிப் பொழுது மனதில் ஐயக் கேள்வி எழும்ப, அந்த நொடியில் அந்த பாத ஒலியும், அவரின் கருணை வார்த்தைகளும் எனக்குள் ரீங்காரம் எடுக்க ஆரம்பித்தது. அந்த ரீங்காரம் என் மனதில் மட்டும் ஒலிக்கவில்லை, என் சரீரம் எங்கும் ஒலித்தது. அது அற்புதமான உணர்வு. அதை உங்களிடம் விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. அந்த பாத ஒலியும் வார்த்தைகளும் இப்பொழுதும் என்னை விட்டு நீங்கவில்லை.

நான் எப்பொழுதெல்லாம் மஹா பெரியவாளின் முன் நிற்கிறேனோ அப்பொழுதெல்லாம் இந்த ரீங்காரத்தை உணர்கிறேன். இது பெரியவா எனக்கு கொடுத்த பாக்கியம். இப்பொழுதும் அதை உணர்ந்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்ற பொழுது அவர் உடம்பு சிலிர்க்க ஒரு நிமிடம் அதில் லயித்து , பின் தன் உரையைத் தொடர்ந்தார்.

“வந்தது மஹா பெரியவாதான் என ஊர்ஜிதமாக, என் குடும்ப நினைவு வர, ஓட்டமும் நடையுமாக இல்லம் வந்தேன். என் மனைவி என்னைக் காணாது வாசலில் கண்ணீரோடு பரிதவிப்புடன் நின்றுக் கொண்டிருந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு என்னை மன்னித்து விடு மன்னித்து விடு எனக் கதறினேன். ஒன்றும் புரியாது என்னை ஏறிட்டவளிடம் நான் உன்னையும் குடும்பத்தையும் பற்றி கவலைப் படாது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தேன் என சொல்ல என் மனைவியின் உடல் பதறுவதைக் கண்டேன். என்ன காரியம் செய்ய நினைத்தீர்கள் என அலறியவளை ஆசுவாசப் படுத்தி அமர வைத்து நடந்தவைகளை விவரிக்க விவரிக்க அவள் ஆச்சர்யத்தில் உறைந்து விட்டாள். ஒன்றும் பேசாது பூஜை அலமாரியிலிருந்த மஹா பெரியவாளின் படத்தை முன் வைத்து கொண்டு, என் கணவர் உயிரைக் காப்பாற்றி எனக்கு மாங்கல்யப் பிச்சை தந்து விட்டீர்கள். பெரியவாளே உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என தன் மாங்கல்யத்தைப் பிடித்துக் கொண்டு அழுதாள். 

அன்று எனக்குள் ஒரு புது சக்தி வந்தது போல் இருந்தது. அன்று முழுதும் என் மனதில் ஆயிரம் கேள்விகள். உலகை மறந்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு கடல் நோக்கிப் போய்க் கொண்டிருந்த என் காதில் எப்படி அந்த பாத சப்தம் தெளிவாகக் கேட்டது? அப்படி என்றால் என் காதில் அந்த சப்தத்தை ஒலிக்கச் செய்தவர் அவர் தான் எனப் புரிந்தேன். கடன் சுமை தீரவும் இல்லை, குறையவும் இல்லை. ஆனாலும் எத்தனயோ மாதங்களாய் ஒரு நொடிப் பொழுதும் நீங்காது என் மனதை துன்பப்படுத்திக் கொண்டிருந்த - அரித்துக் கொண்டிருந்த கடன் சுமை இன்று என் மனதை ஏன் அரிக்கவில்லை என எண்ணிப் பார்த்தேன்,. இத்தனை நாட்களாய் இல்லாத சக்தி இன்று புதிதாய் பாய்வதை உணர்கிறேனே என சிந்திக்க, எனக்கு ஒன்று புரிந்தது. என் உள்ளத்தில் குருவின் வார்த்தைகள் இடைவிடாது ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது.

ஏழு கோடி மந்திரம் இருந்தாலும் குருவின் வார்த்தைகளே மஹா பெரிய மந்திரம். அதுவே சக்தி. அந்த சக்தி நம்மில் இருக்கும் பொழுது வேறு எந்த கவலைகளும் கழிவுகளும் ஒட்டாது. தாமரை இலை தண்ணீர்ப் போல் இருக்கும் என்ற அனுபவத்தைப் பெற்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக, மஹாப் பெரியவா எதற்காக என்னை தடுத்து ஆட்கொண்டார்? நானோ அவரை வணங்கவில்லை. அப்படி இருந்தும் என் மீது ஏன் இவ்வளவு கருணை என எண்ணிய பொழுது என் மனைவியின் புலம்பல் என் காதில் கேட்டது. “அப்பா இருந்த வரைக்கும் மடத்துக்குப் போனேள்......” என்று அவள் தனக்குள் பேசிக் கொண்டே போக எனக்கு பதில் கிடைத்து விட்டது.

என் அப்பாவின் நினைவு வந்தது. அவர் மஹா பெரியவாளின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். எந்த செயலும் அவர் உத்தரவும் ஆசியும் வாங்காது செய்ய மாட்டார். அவர் கோவிலுக்கு சென்று பார்த்ததில்லை. ஆனால் தோன்றிய பொழுதெல்லாம் மஹா பெரியவாளைத் தரிசிக்க கிளம்பி விடுவார். அவர் மஹா பெரியவா மீது கொண்டிருந்த பக்திக்காக தான் பெரியவா என்னைக் காப்பாற்றினார் என தோன்றியது. ‘முந்தைப் பிறவியின் பெரும் பயனோ, எந்தைதாய் செய்த தவப் பயனோ’ என்ற மஹா பெரியவா பற்றிய பாடல் வரிகள் தான் இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. இது என் தந்தையின் தவப் பயன். இவ்வளவு பக்திக் கொண்ட என் தந்தையைப் பார்த்தும், மஹா பெரியவாளின் மகிமை அறியாத பேதையாய் இருந்திருக்கிறேனே, அவரை வழிப் பட்டிருந்தால் இந்த கஷ்ட நிலையே வந்திருக்காதே, நான் எவ்வளவு பெரிய முட்டாள், என நன்கு புரிந்துக் கொண்டேன். என் தந்தையை கை எடுத்து வணங்கினேன்.

அன்றைய நாளும், மறு நாளும் என் மனம் மஹா பெரியவாளின் நினைவாகவே இருந்தது. பல மாதங்களாக தூக்கம் என்றால் என்ன என்பதையே மறந்திருந்த நான் இரு நாட்களும் நன்றாக உறங்கினேன். எனக்குள் ஒரு உற்சாகமும் தெளிவும் இருந்தது. என் உற்சாகத்தைக் கண்ட மனைவி ஆறுதல் அடைந்தாள். என் மனதில் பயமும் கோழைத்தனமும் அறவே இல்லை, எப்படியும் இந்த சூழலிலிருந்து வெளிவர அந்த மஹா பெரியவரே வழிக் காட்டுவார் எனத் திடம் கொண்டேன்.

மூன்றாம் நாள் விடியல் காலை அழைப்பு மணி ஒலிக்க கதவைத் திறந்த எனக்கு ஆச்சர்யம். பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் என் தூரத்து உறவினர் வந்திருந்தார். என் தந்தை இருந்த காலங்களில் இரு குடும்பத்துக்கும் நல்ல போக்குவரத்து இருந்தது. பின்னர் கொஞ்சம் குறைந்து போனது. ஆனாலும் அவர் இங்கு வரும் பொழுது என் வீட்டில் தான் தங்குவார். வந்தவரை ஓய்வு எடுக்கச் சொன்னேன். வந்தவர் சில மணி நேர ஓய்வுக்குப் பின் என் அருகே அமர்ந்து தான் வந்த நோக்கத்தை தெரியப்படுத்தினார். ” நேற்று முன் தினம் இந்த பகுதியைச் சேர்ந்த நண்பரை பார்த்தேன். அப் பொழுது உன்னைப் பற்றி விசாரித்தேன். அவர் உன் நிலையை சொன்னார். கேட்டது முதல் என் உள்ளம் பதறிப் போச்சு. லெட்டர் போடலாமானு நினைச்சேன். நீ உண்மைய சொல்ல மாட்டானு தோணித்து. ஏதோ ஒன்னு என்னை இருக்க விடாம அரிச்சுட்டே இருந்தது. பணத்தை ரெடி பண்ண ஒரு நாள் ஆச்சு. பணம் கைல வந்தவுடனே உன்னை நேரடியா பாத்து பேசலாம்னு வந்தேன்” என்றார். அவர் பையிலிருந்து ஒரு மிகப் பெரியத் தொகையை எடுத்து என் கையில் கொடுத்து வைத்துக் கொள் என்றார். நான் மறுக்க , சரி இதை நான் செய்யும் உதவியாகக் கொள். 10 வருடமோ 20 வருடமோ எப்பொழுது முடியுமோ திருப்பிக் கொடு என்றார். அவர் மிகுந்த உள்ளன்போடு கூறிய வார்த்தைகள் என் நெஞ்சைக் கரைய வைத்தன. கண்ணீரோடு வாங்கிக் கொண்டு அவரின் அன்புக்கு குடும்பமே நன்றி செலுத்தினோம். அவரை இங்கு அனுப்பிய மஹாபெரியவாளின் முன் நின்ற்றேன். இறைவா என் மீது உனக்கு இவ்வளவு கருணையா எனக் கதறினேன்.

அவர் தந்த தொகையைக் கொண்டு முக்கியமான சிறு சிறு கடன்களை அடைத்தேன். கை இருப்பாக கனிசமானத் தொகையை இருத்திக் கொண்டு, பட்சணம் செய்து விற்று பொருள் ஈட்டுவது என நானும் என் மனைவியும் முடிவு செய்தோம். ஒரு வாரத்தில் அனைத்தையும் சரிசெய்து விட்டு , என் மனைவி செய்த பட்சணங்களை இரண்டு மூன்று தூக்கில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு தெருவாக சென்று வியாபரம் செய்தேன். மாலைக்குள் அனைத்தும் விற்றுவிடும். இப்படி 10 நாட்கள் சென்றிருக்கும், பதினோராம் நாள் நான் நான்கு தெரு தாண்டுவதுற்குள் என் பட்சணம் அனைத்தும் காலியாகி விட்டது. இது மஹாபெரியவாளின் கருணை. இப்படி அந்தப் பகுதி முழுதும் பட்சணம் பிரபல்யமாக , ஒரு சிறு கண்ணாடி போட்ட பட்சன தள்ளு வண்டி ஒன்றை தெரிந்தவர் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி, சரி செய்து, இன்னும் பல வகையான பட்சணங்களை செய்து விற்றேன். மதியத்திற்குள் அனைத்தும் முடிந்து விடும். மீண்டும் மாலை வியாபாரம் செய்வேன். ஆனால் ஒரு நாள் கூட வியாபாரம் நடக்கவில்லை என பட்சணங்களை திருப்பிக் கொண்டு வந்ததில்லை. அவரின் கருணையால் வியாபாரம் பெருக, ஒன்றரை வருடங்களில் கணிசமாகப் பணம் சேர்ந்து விட, ஒரு சிறு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, ஆட்கள் வைத்து பட்சணம் மற்றும் பேக்கரி வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். 

மூன்றரை வருடங்களில் அனைத்து கடன்களும் அடைந்து, எனக்கு உதவிய உறவினரின் தொகையையும் செலுத்தி முடித்தேன் என்பது என்னால் நம்ப முடியாத ஆச்சர்யமாக இன்றும் உள்ளது. இப்பொழுது பல ஊர்களிலும் சொந்த இடத்தில் கிளை வைத்து சந்தோஷமாகவும் சுபிட்சமாகவும் இருக்கிறேன். துன்ப காலத்தில் என் உயிரை மீட்டுத் தந்து, வாழ்க்கையை செப்பணிட்டு சீராக்கி, உயர்வடையச் செய்து என் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த அவர் மஹா மஹா பெரியவர்; மஹா மஹா பெரியவர்” என நா தழு தழுக்க மஹா மஹா என அழுத்தமாக சொல்லிய பொழுது அந்த மஹா, மஹா வின் அர்த்தம் அவருக்குப் புரிந்து இருந்தது. 

அவர் மேலும் தொடர்ந்தார். “ நான் என் நண்பரைக் காண இங்கு வந்தேன். இன்று விடியற் காலை என் ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இங்கு மஹா பெரியவாளின் பேரில் கூட்டம் நடப்பதுக் கண்டு மேலும் பயணிக்க முடியாமல் ஏதோ என்னை உந்த அமர்ந்து விட்டேன். த்யானம், பிரார்த்தனை பஜனை என இப்படி ஒரு சத் சங்கத்தை பார்த்த்தில்லை. இன்று என் ஆத்மாவே ஆனந்தத்தில் மிதக்கிறது. என் வாழ்க்கையில் மஹா பெரியவாளின் கருணையை பகிர்ந்துக் கொள்ள சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி. இன்றும் நான் என் குழுந்தைகளுக்கு செல்வ வளத்தை விட்டு விட்டு செல்ல வேண்டுமென்பதில் குறியாய் இல்லை. அவர்களுக்காக மஹா பெரியவாளிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரார்த்தித்து, அந்த பிரார்த்தனை வளத்தை கொடுத்து விட்டு செல்ல நினைக்கிறேன் , என் தந்தை எனக்கு தந்தது போல. “
எங்கோ இருக்கும் உங்களை இங்கு வர வழைத்து, பகிர்ந்து கொள்ள வைத்தவர் அவர். அந்த மஹா பெரியவளுக்கு கோடி வந்தனம் என்று சொல்லி மீண்டும் அந்தப் பாடலை கூட்டத்தினர் அனைவரும் ஒன்றாகப் பாடி ஆனந்தமாய்க் கலைந்தோம்.

அந்தப் பாடல்:

தீராக் கஷ்டத்தில் உம்மை மறந்து பிரிந்து

கடற்கரை சென்று உயிர் மாய்க்க செல்லுகையில்

பாதம் சத்தம் கேட்டு திரும்புகையில்

பூரண தரிசனம் காட்டி பக்தனை மீட்டிய ஐயனே

மஹா பெரியவாளின் அதிசயத்தையும் அற்புத்தையும் கேள்விப்பட்டு பக்திக் கொண்ட மக்கள் எத்தனையோ பேர். ஆனால் மஹாபெரியவாளே அதிசயத்தைக் காட்டி அதன் மூலம் பக்திக் கொண்ட இவர் எப்பேர்பட்ட பாக்கியசாலி என மகிழ்ந்தேன்.

இதயம் நொறுங்குண்டோர் தன்னை நாடுகையில் 

மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய்

வளம் தரும் மாமுனியே சரணம் சரணமையா!

No comments:

Post a Comment